Tuesday, 17 May 2016

swamy Nammazhwarin Thiruvaimozhi Mudhal pasuram.
உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே


Vilakkurai; புறமதத்தவருடைய கொள்கைப்படி எம்பெருமான் நிர்க்குணனல்லன் ஸமஸ்த கல்யாண குணாத்மகன் என்கிற வேதாந்த ஸித்தாந்தத்தை முதலடியிலே வெளியிட்டருளுகிறார். இதனால், எம்பெருமான் தனது திருக்கல்யாண குணங்களைக் காட்டி இவ்வாழ்வாரை ஈடுபடுத்திக் கொண்டமை விளங்கும்.
குணங்களுக்குத் தோற்று அடிமைப்படுதல் என்றும் ஸ்வரூபமாகவே அடிமைப்பட்டிருந்தல் என்றும் இருவகைப்பட்டுள்ளதான அடிமையில் குணப்ரயுக்தமான அடிமையிற்காட்டிலும் ஸ்வரூபப்ரயுக்தமான அடிமையே சிறக்குமென்பது ஸம்ப்ரதாய ஸாரார்த்தமாயினும், ஆழ்வார் தம்மை எம்பெருமான் அகப்படுத்திக் கொண்டது திருக்குணங்களைக் கொண்டாதலால் தாம் இழிந்த துறையை முதலிலே பேசுகிறாரென்க. ஸ்வரூப ப்ரயுக்தமான அடிமையும் ஆழ்வார்க்குக் குறைவற்றதென்னுமிடம் ஆகிலுங் கொடியவென்னஞ்ச மவனென்றே கிடக்கு மெல்லேஎன்ற பாசுரத்தால் வெளியிடப்படுகின்றமை காண்க.
ஸ்வரூப ப்ரயுக்தமான அடிமை இயற்கையிலேயே இருக்கச் செய்தேயும் சேஷியானவன் கல்யாணகுணங்கட்கும் கொள்கலமாயிருப்பதனால் இக்குணங்களும் அடிமைக்கு ஓர் உபாதியாக அமைகின்றன வென்றுணர்க. ஸ்ரீராமபிரானுடைய வநவாஸ ஸமயத்திலே அத்ரிபகவானுடைய ஆச்ரமத்தில் பெருமாள் எழுந்தருளி மஹர்ஷியை அநுவர்த்தித்திருந்தபின்பு அவருடைய தேவியான அநஸூயையைப் பிராட்டி அநுவர்த்தித்திருக்கிறவளவிலே, அவள் பிராட்டியைப் பார்த்து உற்றாரையும் செல்வத்தையும் விட்டுப் பெருமாள் பின்னே காட்டுக்குவந்த விது தைவ யோகத்தாலே உமக்கு நன்றாகக்கூடிற்று; நகரத்திலிருக்கிலுமாம். காட்டிலிருக்கிலுழாம்; பெண்டிர்க்குத் தெய்வம் பார்த்தாவே கிடீர். நீர் இப்படியே எப்போதும் பெருமாள் விஷயத்திலே அனுகூலித்திருக்கக் கடவீர்என்று சொல்ல; பிராட்டி வெட்கமடைந்து கவிழ்தலையிட்டிருந்து எனக்குப் பெருமாள் பக்கலில் அநுராகம் ஸ்வரூபமாகவே உண்டாயிருக்கச் செய்தே அவர் தாம் குணங்களிற் சிறந்தவராகையாலே என்னுடைய அநுராகத்தை குணப்ரயுக்தமாக நாட்டார் நினைக்கக் கூடும்; எப்போதாவது ஒரு ஸமயம் அவரைக் குணங்களைவிட்டுப் பிரித்துக்காட்டக் கூடுமாகில் அப்போது என்னுடைய அநுராகம் ஸ்வரூபப்ரயுக்தமேயன்றி குணப்ரயுக்தமல்ல என்பது நன்கு விளங்க அவகாசமுண்டாகும்; அப்படி ஒருநொடிப்பொழுதும் காட்ட முடியாதபடி அவர் எப்பொழுதும் ஸமஸ்தகல்யாணகுணாம்ருதஸாகரமாக இருப்பதால் நான் அவர் பக்கல் இருக்குமிருப்பை அறிவிக்கப் பெறுகிறிலேன்; அவர் குணஹீநருமாய் விரூபருமா யிருந்தபோதிலும் நான் அவர்பக்கல் இப்படியே காணுமிருப்பேன்என்றாள் என்பது ப்ரஸித்தம். இளையபெருமாள் திருவடியோடே தம்மைப்பற்றிச் சொல்லிக் கொள்ளும்போது அஹமஸ்யாவரோ ப்ராதா குணைர் தாஸ்ய முபாகத:என்று பெருமாளுடைய திருவுள்ளத்தாலே நான் அவர்க்கு உடன் பிறந்தவனாகிறேன் என்னுடைய கருத்தினால் குணங்கட்குத் தோற்று அவர்க்கு அடிமைப்பட்டவன் நான் என்றதும் இங்கு நினைக்கத்தக்கது.
உபநிஷத்துப்போலே பகவத்குணத்தை அளவிடப்புகுந்து பின்வாங்கிப் பரிபவப்படாமல் ஆழ்வார் உயர்வறவுயர் நலமுடையவன்என்று அழகாகப் பேசி முடித்தனரென்ப.
உயர்வு பெற உயர்நலம்- உயர்ந்தவையென்று பேர்பெற்ற மற்ற வஸ்துக்கள் எல்லாவற்றினுடையவும் உயர்த்தி உண்மையன்றென்னும்படியும் தன்னுயர்த்தியே சாச்வதமாகும்படியும் உயர்ந்த கல்யாணகுணங்களை யுடையவன் என்றதாயிற்று.
இனி, உயர்வு என்று (உயவு என்னுஞ் சொல்லுக்கே வருத்தமென்ற பொருளுண்டென்றும் உயர்வு என்பதற்கு அப்பொருளில்லையென்றும் சிலர் கூறுவர்: பூருவாச்சாரியர்களின் வியாக்கியானங்களில் இவர்த்தமுள்ளது) வருத்தத்திற்குப் பேருண்டாதலால், வருத்தமில்லாமல் உயர்த்தி பெற்றனவான குணங்களையுடையவன் என்றலுமொன்று. மற்றையோர்க்கு ஒரு உயர்த்தியுண்டாக வேண்டுமானால் மிக்க வருத்தத்தாலன்றி உண்டாகமாட்டாது; “யுககோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ: புநஸ் த்ரைலோக்யதாத்ருத்வம்.

ப்ராப்தவாதி சச்ரும.என்று - நான்முகக்கடவுள் பல்லாயிரம் யுகங்கள் விஷ்ணுவை ஆராதிதித்து ஸித்தி பெற்றானென்று சொல்லிற்று; பரமசிவன் முதலிய ஒவ்வொரு கடவுளரும் இங்ஙனமே வருத்தப்பட்டு ஸித்தி பெற்றமை வேத வேதாங்கங்களிற் கூறப்பட்டுள்ளது. அவர்களைப் போலன்றிக்கே எம்பெருமானது குணோத்கர்ஷம். எந்த ஆயாஸத்தாலுமன்றி இயற்கையாகவே அமைந்ததாயிற்று.

ஆளவந்தார் முதலிய நம் ஆசாரியார்கள் எம்பெருமானுடைய குணசாலித்வத்தை அருளிச்செய்யுமிடங்களில் ஸ்வரபரவிகாவதிகாதிசயாஸங்க்யேய கல்யாண குணகண:என்றருளிச்செய்வது காண்க. இதில் ஸவாபாவிகஎன்றது - வருத்தமின்றி இயற்கையாகவே அமைந்த என்றபடி.

உயர்வறவுயர்குண முடையவன்என்னாதே நலமுடையவன் என் கையாலே அவனது திருக்குணங்கள் முழுதும் பரம போக்யம் என்னுமிடம் பெறப்படும். நன்மையே உருவெடுத்திருக்கும்போலே. நலம் என்பது பால்பகா அஃறிணைப் பெறராதலால் பன்மைப்பொருள்பட்டு குணஸமூஹங்களைச் சொல்லக்கடவது ஆனந்தகுணமொன்றையே சொல்வதாகவுங் கொள்வர்; அப்போது மறற் குணங்கட்கும் உபலக்ஷணமாகிறது. ஆநந்தாவஹமான விபூதியையுடையவன் என்றலுமொன்று; காரியத்தைச் சொல்லும் சப்தத்தினால் காரணத்தை லக்ஷிக்கிற முறைமையின் காரியமான ஆனந்தத்தைச் சொல்லுகிற நல மென்னுஞ் சொல் காரணமாகன விபூதியை லக்ஷிக்கக் குறையில்லையென்க. இரட்டுற மொழிதலால் உயர்வறவுயர்ந்த திருக்குணங்களையும் விபூதியையு முடையவன் என்றும் முதலடிக்குப் பொருள் கொள்ளத்தகும்.

கூரத்தாழ்வான் இம் முதலடியிலே மிகவும் ஈடுபட்டிருப்பராம்: எம்பெருமானுக்குக் குணமில்லை. விபூதியில்லைஎன்கிற குத்ருஷ்டியகளின் மிடற்றைப் பிடித்தாற்போல உபக்ரமத்தில்தானே
உயர்வறவுயர்நலமுடையவன் என்ற அழகு என்னே! என்று உருகிப்போவராம்.

மயர்வுஅற மதிநலமருளினன் = அடியோடு ஞானமே இல்லாமையும் ஒன்றை வேறொன்றாக அறிகையும், அதுவோ இதுவோவென்று ஸந்தேஹங் கொள்ளுதலும், தெரிந்ததை மறந் தொழிகையுமாகிற இவையெல்லாம்  மயர்வு எனப்படும்; அது அறும்படியாக ஜ்ஞாத பக்திகளிரண்டையும் தமக்குத் தந்தருளினபடியைக் கூறினர். மதிநலம் என்பதை நலம்மதிஎனக்கொண்டு நல்ல ஞானத்தையருளினன்எனவும் பொருள் கூறுவர்; முளைக்கும்போதே வயிரம்பற்றி முளைக்கும் பதார்த்தம்போல உபக்ரமமே பக்திதசையாகப்பெற்ற ஞானம் என்றபடி.
எனக்கு அருளினன்என்ற வேண்டாவோ? எனக்கென்பதை ஏன் விட்டார்? என்னில்; எம்பெருமானுடைய விஷயீகாரம் பெறுதற்கு முன்பு தம்மை அஸத்கல்பராக (இல்லாதவராக) நினைத்திருக்கின்றமையால் மயர்வறமதிநல மருளினன்என்பதற்கு முன்னே எனக்குஎன்று ஸ்வஸ்த்தையைக் கூறத் திருவுள்ளம் பற்றிலர் என்பர். துயரறு சுடரடி தொழுது என்ற பிறகே தம்மை உளராத நினைத்தார்ப்போலும். அதன் பிறகேயன்றோ என் என்று தமது ஸத்தையை வெளியிட்டுக்கொண்டார்.
மயர்வறமதிநலமருளினன்என்ற இரண்டாமடியால், இத்தலையில் நினைவின்றியேயிருக்க, தானேவந்து அருளினன் என்றார். அங்ஙனம் தானாகவே வந்து அருளினவன் தன்னருள் கொள்வாரில்லாத ஒருவனோஎன்ன; அவனருளையே எதிர்பார்த்திருப்பார் ஒருநாடாகவுளர் என்கிறார் மூன்றாமடியால்.
அயர்வறமமரர்களதிபதி = அயர்வாவது மறுப்பு; அது ஒருநாளுமில்லாதவர்களான நித்யஸூரிகளுக்கு நியாமகன் என்க.
துயரறு சுடரடி = அடியார்களுடைய துக்கங்களையெல்லாம் போக்கி அதனால் ஒளிபெற்று விளங்குகின்ற திருவடி என்று எம்பெருமானார்க்கு முந்தின முதலிகள் நிர்வஹிக்கும்படி; அதாவது - துயரறுக்குஞ் சுடரடி என்று கொண்டார்கள். அங்ஙனன்றியே எம்பெருமானார் துயரறுக்குஞ் சுடரடிஎன்று பொருள் நிர்வஹிப்பராம். உன்ன சொல்வடிவத்திற்கு ஏற்ற பொருள் இதுவேயாகும். அதாவது - அடியார்கள் துயர்தீர, தான் துயர் தீர்ந்தானாயிருக்கை. எம்பெருமான் பரது:க்கது:க்கியாகையால் ஆச்ரிதருடையச் து:க்க நிவர்த்தியைத் தன்னுடைய து:க்க நிவ்ருத்தியாகக் கொள்ளுமியல்வினன் என்பதாம்.
:ழ = அதோகதியடைவதைத் தவிர்த்து உயர்கதியடைந்திடு என்றவாறு உஜ்ஜீவித்துப்போ என்றதாயிற்று.
இப் பிரபந்தத்தில் நிரூக்கப்படுகிற தத்துவ ஹித புருஷார்த்தங்களைச் சுருங்கச் சொல்லுகிறது இப்பாசுரம். திருமாலே பரதத்துவமென்றும் அவனது அடி தொழுகையே பரமஹிதமென்றும், (தத்க்ரதுந்யாயத்தாலே) அதனை ப்ராபிக்கையே புருஷார்த்தமென்றும் சொல்லிற்றாகிறது.
பிரபந்தம் இடையூறின்றி முடிவதற்காகப் பிரபந்தாரம்பத்தில் இயற்றப்பட வேண்டிய இஷ்ட தேவதாநமஸ்காரம் முதலான மங்களமும் சுடரடிதொழுதொழு என்பதனால் இயற்றப்பட்டதென்றுணர்க.

இப்பாட்டில், யவனவன் என்பதை ஒரே சொல்வடிவாகக்கொண்டு பொருளுரைக்கப்பட்டது. (வடமொழியில் யோஸௌ என்பதுபோல இதனைக் கொள்க.) அன்றியும், யவன்- யாவனொருவன், அவன்- அவனுடைய என்று முதல் மூன்றடிகளிலும்பொருள் கூறி ஒவ்வொரு அடியோடும் தொழுதெழென்மனனே!என்று கூட்டி மூன்று வாக்கியமாகவும் போஜித்துப் பொருள் கூறுவர். உயர்வறவுயர்நல முடையவன் யவன், அவன் சுயரறு சுடரடி தொழுதெழு; மயர்வற மதிநலமருளினன் யவன் அவன்  துயரறு சுடரடி தொழுதெழு- என்றிப்படி மூன்று வாக்கியமாகிறது. இதுவன்றி, (முதலடியில்) யவன்- யாவனொருவனோ, அவன் அவளினன் என்றும், (இரண்டாமடியில்) யவன் - அப்படி அருளினவன் யாவனோ, அவன் அதிபதி என்றும், (மூன்றாமடியில்) யவன்- அப்படி அதிபதியானவன் யாவனோ, அவன்- அவனுடைய, அடி தொழுது எழு நின்றிப்படி வாக்யைக வாக்யமாகவும் யோஜிப்பதுண்டு. (வாக்யைக வாக்யம்- பல சிறு வாக்கியங்கள் உள்ளடக்கிய மஹாவாக்யம்.) யவனவன் என்னுமிடங்களில் யாவன் என்பது யவன் எனக் குறுகியுள்ளது. நெஞ்சினால் நினைப்பான் யவன்”(திருவாய்மொழி 3-6-9) ‘பயிலுந் திருவுடையார் யவரேலுமவர் கண்டீர்” (திருவாய்மொழி 3-7-1))  விண்ணுங் கடந்தும் பரப்பால்மிக்கு மற்றெம்பால் யவர்க்கும்” (திருவிருத்தம் 43) என்றவிடங்களிலும் இவ்வாறே. இங்கே யாவினா எஞ்சாமைப் பொருளது. ஆவோயவர், யாவர்க்கும் என்றுள்ள பாடங்களை மறுத்து எகர முதலதாகப் பாடங்கொள்ள வேணுமென்று சிலர் வற்புறுத்துவர்; அது அஸம்பிரதாயம். ஏட்டுப்பிரதிகளிலெல்லாம் யகர முதலான பாடமே காண்கிறது; ‘ஆலோடல்லது யகர முதலாது” (தொல்காப்பிய்ம் எழுத்ததிகாரம் மொழிமரபு 32.) என்ற விதிக்குக் கதியில்லை யோவெனின்; அச் சூத்திரவிதி இயற்கை மொழிக்கேயன்றிச் செய்யுளில் வேண்டுழிக் குறுக்கல் பெற்ற மொழிக்கு விலக்காகாது என்று கற்றுணர்ந்த பெரியோர் கூறுவர்.

No comments:

Post a Comment