நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்
மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி பாவி னின்னிசை
பாடித் திரிவனே
தம்முடைய மநோவாக்காயங்களென்ற மூன்று கரணங்களும் ஆழ்வார் விஷயத்திலேயே ஏகாக்ரமாக ஈடுபட்டபடியை அருளிச் செய்கிறார் இதில். நான் என்னுடைய நாக்கைக்கொண்டு அப்ராப்தமான பகவத் விஷயத்திலே செலுத்தாமல் ப்ராப்தசேஷியான ஆழ்வாரைத் துதிப்பதிலே செலுத்திப் பரமாநந்த மடைந்தேன்; என் தலை படைத்த ப்ரயோஜநம் பெறும்படி தலையை ஆழ்வார் திருவடிகளிலே மடுத்தேன்; இது ஸத்யம்.
தேவுமற்றறியேன் என்பதனால் நெஞ்சின்
காரியஞ் சொல்லுகிறார்; நம்மாழ்வாரையொழிய தெய்வமாக நினைக்கமாட்டாது என்மனம்;
நம்மாழ்வாரையே பரதேவதையாகக்கொண்டேன் என்கிறார். முதலடியிலே சொன்ன நாவின்
காரியத்தை மீண்டும் விசேஷித்துக் கூறுகிறார். குருகூர் நம்பி
இத்தியாதியால். எப்போதும் நம்மாழ்வாருடைய திவ்ய ப்ரபந்தங்களையே இனிய
இசையுடன் பாடிக்கொண்டு திரிவேனேயன்றி, அவ்வருளிச்செயலைத் தவிர்த்து
ஸந்த்யாவந்தந மந்த்ரத்தையும் இந்த நாக்கினால் உச்சரிக்கமாட்டேன்
என்கிறாராகக்கொள்க.
இங்கே ஒரு சங்கை பிறக்கக்கூடும்;
அதாவது-“தேவுமற்றறியேன்;” என்று இவர் எம்பெருமானை ஒதுக்கித்
தள்ளுகிறபடியானால் அவ்வெம்பெருமானே தெய்வமென்று கொண்டாடுகிற அருளிச்செயல்
மாத்திரம் இவர்க்கு உபாதேயமாகலாமோ? பகவத்விஷயத்தை உதறிவிட்டு ஆழ்வாரையே
பற்றின விவர் அந்த ஆழ்வாருடைய பெருமையைப் பேசவல்ல பிரபந்தத்தை யேயன்றோ
பாடிக்கொண்டு திரியவேணும் - என்று.
இச்சங்கைக்கு முதற்பாட்டின்
உரைத்தொடக்கத்திலேயே ஸமாதாநங் கூறப்பட்டுள்ளமை காண்க. சரமபர்வ நிஷ்டர்க்கு
பகவத்விஷயம் ஸர்வாத்மநா ஹேயமன்று; தம் ஆசிரியர் உகந்த விஷயமென்று
அவ்வழியாலே பற்றுகை ஸ்வரூபாநுரூபமென்றும் ஸ்வேச்சையாலே பற்றுகை
விருத்தமென்றும் இவ்வளவேயுள்ளது.
இங்கு, “குருகூர்நம்பி பாவைப் பாடித்
திரிவன்” என்னாமல், ‘பாவின் இன்னிசை பாடித் திரிவன்’ என்றதற்கு நஸோக்தியாக
நஞ்சீயரருளிச் செய்யும் படி:- ஐச்வர்யத்தை அல்பாஸ்திரமென்று கழித்து
ஸ்திரமான ஆத்மப்ராப்தியை அபுருஷார்த்தமென்று கழித்து, ஸ்திரமுமாய்ப்
பரமபோக்யமுமான பகவத் ப்ராப்தியை ப்ராப்யத்தில் ப்ரதமாவதியென்று கழித்து,
இதில் சரமாவதியான ஆழ்வாரையும் உத்தேச்யரன்றென்று கழித்து, அவரோடு
ஸம்பந்தித்த விஷயத்தையும் ரஸாச்ரயமன்றென்று கழித்து, அத்தோடு ஸம்பந்தித்த
இசையே தமக்கு உத்தேச்யமென்கிறார். ‘தெய்வத்தண்ணந் துழாய்த்தாராயினுந்
தழையாயினும் தண்கொம்பதாயினும் கீழ்வேராயினும் நின்ற மண்ணாயினுங்கொண்டு
வீசுமினே’ இத்தியாதியிற்படியே பகவத்ஸம்பந்தம் கழியக்கழிய நிறம்
பெறுகிறபடி.”
பாடித்திரிவனே என்ற சொல்நயத்தால்,
ஆழ்வாரருளிச்செயலைப் பாடவே தான் எனக்கு உடம்பில் வலிவு உண்டாகி
ஸஞ்சரிக்கவல்லசக்தி உண்டாகிறது என்னுங்கருத்துத் தோன்றும். “ரஸாயநஸேவை
பண்ணித்திரிவாரைப்போலே; இதுகாணும் இவர்க்கு தாரகமாய் இவரை ஸஞ்சரிக்கப்
பண்ணுகிறது”
“நாவாயிலுண்டே நமோ நாரணாவென்று ஒவா
துரைக்கு முரையுண்டே” என்றும், “என்நாவிலின்கனி யானொருவர்க்குங்
கொடுக்ககிலேன்” என்றும் மற்றையாழ்வார்கள் பகவத் விஷய ஸ்துதியையே தமது
நாவுக்குப் பயனாக நினைத்திருப்பர்; “அடியையடைந் துள்ளந்தேறி, ஈறிலின் பத்
திருவெள்ளம் யான் மூழ்கினன்” என்று பகவத் விஷயாவகாஹநத்தையே தமக்குப்
பேரின்பமாக நினைத்திருப்பர்; “கோலமாமென் சென்னிக்கு உன் கமலமன்ன குரைகழலே”
என்று பகவத் பாதஸேவையையே தமது தலைக்குப் பேறாக நினைத்திருப்பர்;
“கண்ணனல்லால் தெய்வமில்லை” என்று அவனையே தெய்வமாக நினைத்திருப்பர்; இந்த
ப்ரதிபத்திகளெல்லாம் மதுரகவிகளுக்கு ஆழ்வார்திறத்திலே யாமென்பதை
இப்பாட்டில் உய்த்துணர்க.
நம்பிள்ளை யீடு:- “குருகூர்நம்பிபா’
என்றது -கண்ணி நுண் சிறுத்தாம் பென்னுதல்; திருவாய்மொழி என்னுதல்.
திருவாய்மொழி தன்னில் பலகாலும் ‘குருகூர்ச்சடகோபன்’ என்றாரிறே;
அவ்வழியாலேயாய்த்துத் திருவாய்மொழி தன்னையும் இவர் ஆதரிப்பது.”
மெய்மையே= ‘ஆழ்வார் நீசஜாதியிற்
பிறந்தவராதலால் அர்ச்சையில் அவர் ஆதரிக்கத்தக்கவரே யன்றி விபவத்தில்
ஆதரிக்கத்தக்கவரல்லர்; (“********”) மாதா புத்திரனுக்கு
நமஸ்கரணீயையாயினும் பஹிஷ்டையாயிருக்குங் காலத்திலே அவள் எப்படி
நமஸ்கரிக்கத்தகாதவளோ அப்படி தான் நீசஜாதீயரான ஆழ்வார்கள் விபவத்திலே
அநாதரணீயர்’ என்று பிதற்றும் த்ரமிடோபநிஷக்குத்ருஷ்டிகளின் மிடற்றைப்
பிடித்தாற்போலே அருளிச் செய்கிறபடிபாரீர். மதுரகவிகள்
ப்ராஹ்மணோத்தமராயிருந்துவைத்து, ஆழ்வாருடைய விபவதசையிலே அவர்க்கு நான்
ஸகலவித பரிசர்யையும் செய்தேன் காண் என்று ஸத்யம்பண்ணிச் சொல்லுகின்றார்
காண்மின்.
‘நவிற்றின்பம்” என்று பெரும்பாலும்
ஓதப்பட்டாலும் “நவிற்றியின்பம்” என்ற பிராசீந பாடத்தை ஆதரிப்பதே அழகு;
கலிவிருத்தத்தால் அமைந்த இப்பிரபந்தம்- நேரசைமுதலாகத் தொடங்கப்பட்ட
பாட்டுகள் ஒற்றொழித்துப் பதினோரெழுத்துக் கொண்ட அடியையுடையனவாகவும்,
நிரையசை முதலாகத் தொடங்கப்பட்ட பாட்டுக்கள் ஒற்றொழித்துப்
பன்னிரண்டெழுத்துக்கள் கொண்ட அடிமையுடையனவாகவும் அமைந்திருக்கும்
முறைமைக்கிணங்க நவிற்றி என்றிருக்கவேணுமென்க. நவிற்று என்றால்
பத்தெழுத்தாய்விடுமன்றோ ‘நவிற்று’ என்ற பாடத்தில், நவில் பகுதி; ‘நவிற்றி’
என்ற பாடத்தில், நவிற்று பகுதி: பொருள் ஒன்றே.
No comments:
Post a Comment