Tuesday 17 May 2016

நம்மாழ்வார் - ஆழ்வார்திருநகரி


திருநக்ஷத்திரம் – வைகாசி, விசாகம்
அவதார ஸ்தலம்ஆழ்வார் திருநகரி
ஆசாரியன்விஷ்வக்ஸேநர்
சிஷ்யர்கள் – மதுரகவியாழ்வார், ஸ்ரீமந்நாதமுநிகள் வழி மற்றைய ஆசார்யர்கள்
இவர் மாறன், சடகோபன், பராங்குசன், வகுளாபரணன், வகுளாபிராமன், மகிழ்மாறன், சடஜித், குருகூர் நம்பி என்று பல திருநாமங்களால் போற்றப்படுபவர்.
திருக்குருகூர் என்றழைக்கப்படும் ஆழ்வார் திருநகரியில், காரி உடையநங்கை என்பாருக்கு மகனாக, கலியுகம் தொடங்கி சில நாட்களிலே நம்மாழ்வார் பிறந்தார். “ஒவ்வொரு ஜீவாத்மாவும் பல கோடி பிறவிக்குப் பிறகே இவ்வுலகில் உள்ள அனைத்தும் வாசுதேவனின் சொத்து என்று அறிந்துகொள்கிறது. அப்படிப்பட்ட ஜ்ஞாநியைக் காண்பது அரிது” என்று பகவத் கீதையில் கண்ணன் எம்பெருமான் அறிவிக்கிறார். எம்பெருமானுக்கு மிகவும் உகந்த அப்படிப்பட்ட அரிய ஜ்ஞாநிகளுள் நம்மாழ்வார் ஒருவர் என்பதை அவரது வாழ்க்கையின் மூலமாகவும், ஸ்ரீஸுக்திகளின் மூலமாகவும் நாம் நன்கு அறிந்து கொள்ளலாம். இப்பூவுலகில் முப்பத்திரண்டு வருடங்கள் வாழ்ந்த ஆழ்வார், ஸம்ஸாரத்தில் பற்றில்லாமல் எம்பெருமானையே எப்பொழுதும் த்யாநித்து ஒரு புளியமரத்தடியில் வாழ்ந்ததார். எப்பொழுதெல்லாம் நாம் குருகூர் என்ற வார்த்தையைக் கேட்கிறோமோ, திருவாய்மொழி பாசுரங்களில் பலச்ருதி ஸேவிக்கும்பொழுது குருகூரை உச்சரிக்கிறோமோ, அப்பொழுதெல்லாம் தென்திசையில் உள்ள ஆழ்வார் திருநகரியை நோக்கி அஞ்சலி செலுத்துவேண்டும் என்று நம் பூர்வாசாரியர்களின் வ்யாக்யானங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன.
நம்மாழ்வார் ப்ரபந்ந ஜநகூடஸ்த்தர் – அதாவது ப்ரபந்ந குலத்தவருக்கு முதன்மையானவர், முதல்வர் என்று போற்றப்படுபவர். அதேபோல் வைஷ்ணவ குல அதிபதி அதாவது வைஷ்ணவர்களுக்கு முதல்வர் என்று ஆளவந்தார் அவரை போற்றுகிறார். தன்னுடைய ஸ்தோத்ர ரத்னத்தின் 5-வது ஸ்லோகத்தில் தனக்கும் தன்னுடைய சிஷ்யர்களுக்கும், குலத்தவருக்கும் தந்தை, தாய், பிள்ளை, செல்வம் மற்றும் எல்லாம் வகுளாபரணனே என்று ஆளவந்தார் அவரது திருவடிகளில் ஸேவிக்கிறார்.


மாறன் அடிபணிந்துய்ந்தவன் என்று ஆதிசேஷனின் அவதாரமான எம்பெருமானாரே, நம்மாழ்வாரிடம் சரணாகதி செய்து மேன்மை அடைந்தார் என்பதன் மூலம் மாறனின் பெருமையை நாம் அறியலாம்.
தன்னுடைய கல்யாண குணங்களை எல்லோருக்கும் புரியும்படி த்ராவிட பாஷையில் பாடி, பத்தாத்மாக்களை உய்வித்து, ஸ்ரீவைஷ்ணவ மார்கத்தில் சேர்க்க எம்பெருமான் நம்மாழ்வாரையே தேர்ந்தெடுத்தார் என்று நம்பிள்ளை தம்முடைய ஈடு மற்றும் திருவிருத்த வ்யாக்யாநத்தின் அவதாரிகையில் ஸ்தாபித்திருக்கிறார்.

அங்கு கண்டுகொள்வது. இதை ஸ்தாபிப்பதற்கு அவர் நம்மாழ்வாரின் பாசுரங்களையே ஆதாரமாகக் கொள்கிறார். நம்மாழ்வார் தம்முடைய பாசுரங்களின் மூலம் தான் ஸம்ஸாரத்தில் உழன்றதாகவும், தன்னால் இதில் இனிமேல் இருக்க முடியாது என்றும், நெருப்பில் தகிப்பது போன்று இருப்பதாகவும் கூறுவதன் மூலம் அவர் ஸம்ஸார துயரில் இருந்தார் என்று உணரலாம். ஆனால், திருவாய்மொழி முதல் பாசுரத்தின் மூலம் எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றார் என்பதையும் அதனால் ஆழ்வார் முக்காலத்தையும் நேராக பார்த்து உணர்ந்தவர் என்பதையும் நாம் அறியலாம்.

அவயவி அவயவ பாவத்தின் மூலம் ஆழ்வார் அவயவி என்றும் ஏனைய ஆழ்வார்கள் அவயவம் என்றும், அவர்கள் எல்லோரும் ஸம்ஸாரத்தில் துன்புற்று பின்பு எம்பெருமானின் க்ருபையால் ஆழ்வாரை போலே மயர்வற மதிநலம் அருளப்பெற்று உய்ந்தார்கள் என்று அறிந்துகொள்கிறோம்.
நம்மாழ்வார் நான்கு திவ்யப்ரபந்தங்களைப் பாடியுள்ளார்:
  • திருவிருத்தம் (ரிக் வேத ஸாரம்)
  • திருவாசிரியம் (யஜுர் வேத ஸாரம்)
  • பெரிய திருவந்தாதி (அதர்வண வேத ஸாரம்)
  • திருவாய்மொழி (ஸாம வேத ஸாரம்)
நம்மாழ்வாரின் இந்நான்கு ப்ரபந்தங்களும் நான்கு வேதத்திற்கு ஈடாகும். அதனாலேயே அவர் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்றழைக்கப்படுகிறார், அதாவது ஸம்ஸ்க்ருத வேதத்தின் ஸாரத்தை தமிழில் அருளிச்செய்தவர் என்று. மற்றைய ஆழ்வார்களின் ப்ரபந்தங்களும் வேதத்தின் மற்ற அங்கங்களேயாகும்.

 திவ்ய ப்ரபந்தத்தின் நாலாயிரத்திற்கும் திருவாய்மொழியே ஸாரமென்று போற்றப்படுகிறது. நம் பூர்வாசார்யர்களின் வ்யாக்யானம், மற்றும் ரஹஸ்ய க்ரந்தங்கள் எல்லாம் திருவாய்மொழியை ஆதாரமாகக் கொண்டுள்ளன. இப்படிப்பட்ட உயர்ந்த ஸ்ரீஸுக்திக்கு ஐந்து வ்யாக்யானங்களும் அரும்பதங்களும் எம்பெருமானின் க்ருபையால் இன்று நம்மிடையே கிடைக்கப்பெற்றுள்ளது.

நம்மாழ்வாருக்கு பரம பாகவதோத்தமர்களான ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி, கோபிகைகள், லக்ஷ்மணன், பரதாழ்வான், சத்ருக்னாழ்வான், தசரதன், கௌசல்யை, ப்ரஹ்லாதாழ்வான், விபீஷணாழ்வான், ஹனுமான், அர்ஜுனன் போன்றோரின் குணங்கள் அனைத்தும் உள்ளன என்றும், ஆனால் ஆழ்வாரின் குணங்களில் ஒரு சிலவற்றையே நாம் மற்றவரிடம் காணலாம் என்று நம் பூர்வாசார்யர்கள் கூறுவதன் மூலம் ஆழ்வாரின் பெருமையை நாம் அறியலாம்.

நம்பிள்ளை தம்முடைய ஈடு வ்யாக்யானத்தில், திருவாய்மொழி 7.10.5 ஆம் பதிகமான ‘பலரடியார் முன்பருளிய‘ என்ற பாசுரத்தில் ஆழ்வாரின் திருவுள்ளம் என்ன என்பதை அழகாக விளக்கியுள்ளார். ஸ்ரீ வேதவ்யாஸர், ஸ்ரீ வால்மீகி, ஸ்ரீ பராசரர், முதலாழ்வார்கள் போன்ற தமிழ் புலமை பெற்றவர்களை தன்னைப் பாடும்படி செய்யாமல், ஆழ்வாரையே எம்பெருமான் தேர்ந்தெடுத்ததன் நோக்கம் அவனது நிர்ஹேதுக க்ருபா (காரணமற்ற கருணை) மாத்திரமேயன்றி வேறில்லை என்பதே அவரது திருவுள்ளம்.

இவற்றை மனதில் கொண்டு ஆழ்வாரின் சரித்திரத்தைப் மேலே பார்ப்போம்:
அவயவங்களான மற்ற ஆழ்வார்களுக்கு அவயவியான நம்மாழ்வார், கங்கை, யமுனை, ஸரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளை விட உயர்ந்ததாகக் கருதப்படும் தாமிரபரணி நதிக்கரையோரம், திருக்குருகூரிலே அவதரித்தார். எம்பெருமானைத் தவிர்த்து, மறந்தும் புறம் தொழா மாந்தர் என்று திருமழிசையாழ்வார் போற்றிய ப்ரபந்ந குலத்தவரான காரி என்பாருக்கு மகனாக அவதரித்தார் ஆழ்வார். திருவழுதி வள நாடர் என்பவரின் மகனாக அறந்தாங்கியார், அவருடைய மகனாக சக்ரபாணியார், அவரின் மகனாக அச்யுதர், அவர் மகனாக செந்தாமரைக் கண்ணர், அவருடைய மகனாக பொற்காரியார், அவரின் மகன் காரியாருக்கு மகனாக நம்மாழ்வார் அவதரித்தார்.

பொற்காரியார் வம்ச வ்ருத்திக்காகவும், லோகக்ஷேமத்திற்காகவும் தன் மகன் காரிக்கு ஒரு ஸ்ரீவைஷ்ணவப் பெண்னைத் தேடினார். இதற்காக திருவண்பரிசார திவ்யதேசம் சென்று அங்கு திருவவாழ்மார்பர் என்பவரிடம் அவருடைய பெண்னான உடையநங்கையை திருமணத்திற்குப் பெண் கேட்டார். திருவாழ்மார்பரும் ஸம்மதித்து, காரியாருக்கும் உடையநங்கைக்கும் விமர்சையாக திருமணம் நடந்தது. அவர்கள் தம்பதிகளாக திருக்குருகூர் வரும் காட்சி, மிதிலையிலிருந்து ராமன் சீதையை அயோத்திக்கு அழைத்து வந்ததைப் போல் இருந்தது. அந்த ஊரில் உள்ளோர் அவர்களை அன்போடும் பக்தியோடும் வரவேற்றனர்.
ஒருமுறை தம்பதிகள் திருவண்பரிசாரம் சென்று திரும்பும் வழியில் திருக்குருங்குடி நம்பியை தரிசித்து வம்சம் வளரப் பிள்ளை வரம் வேண்டினர். எம்பெருமான் தானே அவர்களுக்கு மகனாகப் பிறப்பதாக அருளினார். இருவரும் ஸந்தோஷமாக ஊர் திரும்பிய சில நாட்களில் உடையநங்கை கருவுற்றாள். கலியுகம் தொடங்கி 43-ம் நாளில், திருமாலால் அருளப் பெற்ற சடகோபன் என்று தன்னைப் பற்றி பாடிய நம்மாழ்வார், எம்பெருமானின் அதீனத்திற்குட்பட்டு விஷ்வக்சேநரின் அம்ஸமாக, பஹுதாந்ய வருடத்தில் (ப்ரமாதி வருடம் என்றும் கூறுவதுண்டு), வஸந்த காலத்தில், வைகாசி மாதத்தில், சுக்ல பக்ஷத்தில், பௌர்ணமி திதியில், திருவிசாக நக்ஷத்திரத்தில் ஆழ்வார் அவதரித்தார்.
ஆதித்ய ராமதிவாகர அச்யுத பாநுக்களுக்கு நீங்காத உள்ளிருள் நீங்கி சோஷியாத பிறவிக்கடல் சோஷித்து விகஸியாத போதில் கமலம் மலரும்படி வகுளபூஷண பாஸ்கரோதயம் உண்டாய்த்து உடையநங்கையாகிற பூர்வஸந்த்யையிலே
அர்த்தம்: திவாகரன் என்றழைக்கப்படும் சூரியன் உதயமாகும்போதும், திவாகரன் என்று போற்றப்படும் ராமனோ, கண்ணனோ பிறந்த போதும் போகாத ஸம்ஸாரம் என்ற இருள் அல்லது அறியாமை, நம்மாழ்வார் பிறந்ததும் ஸம்ஸாரிகளுக்கு உள்ளிருள் நீங்கி ஞானம் மலர்ந்தது. ஆகையினாலே ‘வகுள பூஷண பாஸ்கரன்’ என்றழைக்கப்படுகிறார். பாஸ்கரன் என்றால் சூரியன் என்று பொருள். இவர் உடையநங்கையால் பெற்றெடுக்கப்பட்டார்.

ஆழ்வார் திருக்குருகூர் ஆதிநாத பெருமாள் கோவில் புளியமரத்தடியில் தவமிருப்பார் என்றறிந்து அவரை காப்பதற்கு ஆதிசேஷனே இங்கு புளியமரமாகத் தோன்றினார் என்று குருபரம்பரையிலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம்.
ஆழ்வாரின் மேல் வரலாற்றை நாம் மதுரகவியாழ்வாரின் சரித்திரத்திலே காணலாம்.

நம்மாழ்வாரின் தனியன்:
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேந மத் அந்வயாநாம்
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரநமாமி மூர்த்நா

No comments:

Post a Comment