Wednesday, 25 May 2016

கண்ணிநுண் சிறுதாம்பு.

           




            கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணி யபெரு மாயன்என் னப்பனில்
நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்
அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே.

Vilakkurai: ஆழ்வாருடைய ஒப்பற்ற போக்யதையையும், அந்த போக்யதையின் ரஸமறிந்தவர், தாமொருவரே என்பதையும் இப்பாட்டில் அருளிச் செய்கிறார். நம்மாழ்வர், மற்றுள்ள அவதாரங்களிற் காட்டில் க்ருஷ்ணாவதாரத்திலே, அது தன்னிலும் நவநீத செளர்யம்பண்ணி ஆய்ச்சியர்தாம்பினால் உரலினிடை ஆப்புண்டிருந்த அபதாநத்தில் எத்திறம்! உரலினோடிணைந்திருந்  தேங்கிய எளிவே!என்று ஆறுமாதம் மோஹித்திருந்தவராதலால். அந்த அபதாநத்தை முன்னிட்டுக் கண்ணபிரானைக் கூறுகின்றார்.
தேவுமற்றறியாதே ஆழ்வாரைப்பற்றின இவர் முதலடியிலே பகவத் விஷயத்தில் இறங்குவானேன்? அதிலும் என் அப்பன் என்று பரமோத்தேச்யதை தோற்றச் சொல்லுவானேன்? என்னில்; ஆழ்வார் ஆழங்காற்பட்ட துறை என்பதுபற்றியும், ஆழ்வார் உகத்த விஷயத்தைப் பேசினால் அவர்க்கு முக மலர்த்தி உண்டாகுமென்பது பற்றியும் பேசுகிறார். மேலும் சரமபர்வநிஷ்டர்க்கு பகவத் விஷயம் ஸர்வாத்மநா அநுத்தேஸயமுமன்று; தாமாகஸாக்ஷாத் பகவத்விஷயத்தைப் பற்றக்கூடாதேயொழிய, தமது ஆசிரியர் உகந்தவிஷயமென்று அவ்வழியாலே பற்றுகை விருத்தமன்று. மேலும்
இப்பாட்டில் எம்பெருமானைவிட்டு ஆழ்வாரைப்பற்றி மகிழ்ந்தவாறு கூறுகின்றதேயன்றி, பகவத் விஷயத்தைப் பற்றுவதாகக் கூறப்படவுமில்லை. முதலடியிலே எம்பெருமானைப் பேசியதனாலும், அதிலும் எம்பெருமானுக்கு இட்ட விசேஷணங்களின் வைலக்ஷண்யத்தாலும் ஆபாதத: தோற்றக்கூடிய ஸங்கையை  அநுவதித்துப் பரிஹரித்ததித்தனை.
என் அப்பனில் - என் அப்பனை விட்டு  என்றபடி. வடநூலார் ல்யப்லோபே பஞ்சமீஎன்பர்; “வ்ருக்ஷாத்பர்ணம் பததிஎன்றவிடத்து வ்ருக்ஷாத்என்ற பஞ்சமியானது வ்ருக்ஷம் விஹாய என்ற ஸ்தாநத்திலேயாமென்று உதாஹரணமுங் காட்டுவர்; அதுபோல் இங்குக்கொள்க.
கண்ணபிரான், வெண்ணெய் களவுசெய்கிற தன்னை யசோதைப்பிராட்டி அடிக்கடி தாம்பினால் கட்டி வருத்துகின்றாளென்று வீட்டிலுள்ள கயிறுகளைத் துண்டுதுண்டாக அறுத்து வைத்திடுவான்; அவற்றை அவள் ஒன்றோடொன்று முடிபோட்டு ஒரு கயிறு வடிவமாக்கி அதுகொண்டு கண்ணபிரானைக் கட்டுவள்; ஆனது பற்றித் தாம்புக்குக் கண்ணி என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. நுண் சிறு என்ற அடைமொழிகள் தாம்பின் சுற்றளவிலும் நீட்டளவிலுமுள்ள  சிறுமையைக்கூறும்; மெல்லிதாய்க் குறுகிய என்றபடி.
இப்படிப்பட்ட தாம்பினால் கட்டும்போது, தன் உடம்புக்கு எட்டம் போராதபடி மிகச்சிறிதான அத்தாம்பினால் கட்டமுடியாதபடி எளிதில் தன்னைத் தப்புவித்துக்கொள்ள வல்லவனாயினும்,   தனது  ஸௌஸீல்யம் ஸௌலப்யம் ஆஸ்ரித பாரதந்திரியம் முதலிய சீலங்களை வெளியிடுவதற்கென்றே பரத்வநிலையைத் தவிர்ந்து மநுஷ்ய ஸஜாதீயனாக அவதரித்திருக்கிற தான் உரலோடு கட்டுண்டிருக்கை முதலிய இவ்வகைகளால் தான் அக்குணங்களை விளங்கச்செய்து கொள்ளவேணுமென்று கொண்டு, ஒரு சுற்றுக்குப் போராத தாம்பு இரண்டு மூன்று சுற்றுக்குப் போரும்படி உடம்பைச் சுருக்கி அமைத்துக்கொண்ட அற்புதம் கட்டுண்ணப்பண்ணிய என்ற சொல் நயத்தாற் போதரும்கட்டுண்டஎன்னாது கட்டுண்ணப்பண்ணிய என்றது - தன்னைக் கட்டுவதற்குத் தானே இசைந்து போந்தமையை நன்கு காட்டவற்றென்க.
இங்கு நஞ்ஜீயரருளிச் செயல்- ஆசிரிதர் கையாலே கட்டுண்ணாவிடில் ஸ்ரீலத்துக்குப் போராது. அநாஸ்ரிதரைக் கட்டாவிடில் ப்ரபாவத்துக்குப் போராது. ராஜாவானவன் எதிரிகளைக் கட்டிவைக்கையும் பும்ஸ்த்வம்; தன் மஹிஷியின்கையில் பூமாலையாலே கட்டுண்டு கிடக்கையும் பும்ஸ்தவம்.
பரம்புருடன் கர்மவஹஸ நம்போலியரைப் போற் பிறந்தவாறும், பசியுண்டாகி நவநீதம் முதலியவற்றை விரும்பியவாறும்; அவற்றை இடுவாரில்லாமல் களவுவழியிலே பெறுகையும், அவற்றைச் சடக்கென விழுங்கிவிட்டு மறைத்துக் கொள்ளமாட்டாமல் வாயது கையதாக அகப்பட்டுக்கொள்கையும் இடக்கை வலக்கை யறியாதவர்கள் கையாலே  கட்டுண்கையும், ஸம்ஸாரபந்தங்களையெல்லாம் தவிர்க்கவல்லவனான தான் இந்த பந்தகத்தைத் தவிர்த்துக் கொள்ள மாட்டாதவனாகி ஏங்கியேங்கி அழுகையுமாகிற இவையெல்லாம் என்ன ஆச்சரியம்! என்பார்  பெருமாயன் என்கிறார். இவனுடைய மேன்மைக்கு எல்லை காண முடியுமாயினும் நீர்மைக்கு எல்லைகாண முடியாதென்ப.
(என் அப்பனில்.) நஞ்சீயருரை:- கீழ் ஆசார்யருசி பரிக்ருஹீதமான அர்த்தமாகையாலே க்ருஷ்ணவ்ருத்தாந்தம் சொல்லிற்று; மேல் உத்தேஸ்யமான (ஆழ்வார்) விஷயத்தைச் சொல்லாதே அவனை என்னப்பனென்பானென்? என்னில்; தம்மை ஆழ்வார் அங்கீகரிக்கைக்காக எம்பெருமானோடு தமக்கொரு ஸம்பந்தம் சொல்லிக்கொள்ளுகிறார். ஒரூருக்குப் போம்போது வழியிடையிலே நீரும் நிழலும் நன்றாயிருந்ததுஎன்று ஒதுங்கினால் உத்தேஸ்யமாக வேணுமோ?”.
பகவத் விஷயத்தைவிட்டு ஆழ்வாரைப்பற்ற வேண்டியதுமில்லை; ஆழ்வார்! என்று ஒருகால் வாயினாற்சொன்னாலும் போதும் என்பார் என்றக்கால் என்கிறார். அண்ணிக்கும் - தித்திக்கும் என்றபடி. ஆழ்வார்க்கு  நிரந்தர பகவத் விஷயாநுபவத்தாலே பிறந்த ஆநந்தாதிசயமடங்கலும்  இவர்க்கு ஆழ்வாரை ஒருகால் சொன்னமாத்திரத்திலே உண்டானபடி.
அண்ணிக்கும் அமுதூறும்”{ என்று இவர் சொன்னவுடனே, கருவிலே திருவிலாதார் சிலர் எங்களுக்கு ஆழ்வார் ரஸிக்கவில்லையேஎன்ன; என் நாவுக்கே என்கிறார்; முதலடியான பகவத்விஷயமுங்கூட ரஸியாதிருக்கிற உங்களுக்கு, சரமாவதியான ஆழ்வாரளவும் ரஸிக்கும்படியான எனக்கு ரஸிக்குமாபோலே ரஸிக்குமோ? என்கை. அன்றியே என் நாவுக்கே என்றது- அநாதிகாலமாக விஷயாந்தரங்கள் ரஸித்துக்கிடந்த என்னுடைய நாவுக்கே இன்று ஆழ்வாரென்றால் ரஸித்திருக்கும்படி என்னபாக்கியம்! என  ஈடுபடுகிற படியுமாம்.

No comments:

Post a Comment