Asmath Gurubyo Nama:
நன்மை யால்மிக்க நான்மறை யாளர்கள்
புன்மை யாகக் கருதுவ ராதலின்
அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்
தன்மை யான்சட கோபனென் நம்பியே.
முதற்பாட்டில் எம்பெருமானைவிட்டு
ஆழ்வாரையே பற்றினதாகக் கூறின நீர் ‘ஆழ்வாருகந்தவிஷயம்’ என்பது பற்றி பகவத்
விஷயத்தை விரும்புவானேன்? ஆழ்வார் உகந்தால் நீரும் உகக்கவேணுமோ? என்று
சிலர் கேட்க; ஸகல வைதிகர்களாலும் ‘இது அபதார்த்தம்’ என்று கைவிடப்பட்ட
அடியேனை யாவரொரு ஆழ்வார் விசேஷமாகக் கடாக்ஷித்தருளி ஸகலவித பந்துக்களும்
செய்யக் கூடிய காரியத்தைத் தாமொருவராகவே அடியேன் திறத்துச் செய்தருளிப்
பொருளல்லாத வென்னைப் பொருளாக்கியருளினாரோ அவ்வாழ்வாரன்றோ எனக்குத் தலைவர்;
அவர் உகந்தவிஷயத்தை நான் உகவாதொழிந்தேனாகில் ஆழ்வார் என்னை
அங்கீரித்தருள்வதற்கு முன்பு நான் நின்றநிலைக்கும் இப்போதைய நிலைமைக்கும்
என்ன வாசி உள்ளதாம்? என்ற கருத்துத்தோன்ற அருளிச்செய்கிறார்.
(நன்மையால் மிக்க) என்னை இகழ்ந்து
கைவிட்டவர்கள் ஸாமாந்ய புருஷர்களல்ல; நன்மையால்மிக்க நான்
மறையாளர்களாய்த்துக் கைவிட்டது; அதாவது- ஒருவனிடத்தில் சில குணங்களும் சில
தோஷங்களுங்கிடந்தால் தோஷாம்ஸங்களைத் தள்ளிவிட்டுக் குணபாகங்களையே நோக்கிக்
கைக்கொள்ளுதல், ஸ்வல்ப குணமுமில்லாமல் தோஷங்களே கூடு பூரித்துக்கிடந்தாலும்
அக்குற்றங்களையே நற்றமாகக் கொண்டு கைக்கொள்ளுதலாகிற நன்மையிற்
சிறந்தவர்களாய், இவ்வளவு ஆத்மகுணபூர்த்தி உண்டாவதற்கு ஈடாக நான்கு
வேதங்களிலும் வ்யாஸபதம் செலுத்த வல்லவர்களான பெரியோர்களுக்கும் தமது
நன்மையைக்கொண்டு என்னைக் கைக்கொள்ள முடியாதபடி மஹாபாபியாய்க் கிடந்தேனென்னு
மிவ்வளவையே காரணமாகக்கொண்டு ஆழ்வார் கடாக்ஷித்தருளினார் என்கை.
“நன்மையால்மிக்க நான்மறையாளர்” என்பதற்குப் பொருந்தியவர் கூரத்தாழ்வான்
ஒருவரே என்று நம்முதலிகள் அனைவரும் ஒருமிடறாக அருளிச்செய்வர்களாம்.
கூரத்தாழ்வான் இகழ்ந்து கைவிடும்படியான ஜந்து உலகத்திலேயே கிடையாது;
அப்படிப்பட்ட கூரத்தாழ்வானும் இம்மதுரகவிகளைக் கண்டால் விலக்கித்
தள்ளும்படியாக அத்தனை ஹேயவஸ்துவாய்த் தாமிருந்ததாக நைச்யாநுஸந்தாநம்
பண்ணிக்கொள்ளுகிறபடி.
(புன்மையாகக்கருதுவர்) புன்மை என்பது
பண்புப்பெயர் (தர்மம்); புல்லியன் என்பது பண்பி (தர்மி); புல்லியன்
(-க்ஷூத்ரன்) என்று என்னைக் கருதுவர் என்ன வேண்டியிருக்கப் ‘புன்மையாகக்
கருதுவர்’ என்றது- புன்மை என்று வேறொரு ஆதேயவஸ்நுவும் புல்லியன் என்று
வேறொரு ஆதார வஸ்துவும் கிடையாது; புன்மையே மதுரகவியாக ஒரு உருவை யெடுத்துக்
கொண்டு வந்திருக்கின்றதென்று கருதுவர் என்றபொருள் தோன்றுவதற்காம்.
இவ்விடத்தில் விவக்ஷிதமான புன்மை மேற்பாட்டில் விசதம்.
கருதுவர்= காலவழுவமைதி; “விரைவினு மிகவினுந் தெளிவினுமியல்பினும், பிறழவும்பெறூஉமுக் காலமுமேற்புழி” என்பது நன்னூல்.
ஆதலில் = அனைவருங் கைவிட்டதுதானே ஹேதுவாக
என்றபடி. ‘இனி இம்மதுரகவிக்கு நாமல்லது ரக்ஷகரில்லை’ என்று தம்முடைய
க்ருபாமாத்ரப்ரஸந்நாசாயத்வத்தை வெளியிட்டுக்கொண்டு என்னை ஆண்டாரென்கிறார்.
நான்வேறு போக்கடியற்று ‘ஆழ்வார் திருவடிகளே சரணம்’ என்று அடைக்கலம் புகுந்த
பின்பு ஆழ்வார் என்னை ஆண்டருளினாராகில் அதற்கு நான் அவ்வளவாக
உருகமாட்டேன்; என்னுடைய இசைவு இல்லாதிருக்கவும் தாமே என்னுடைய புகலறுதியைப்
பார்த்துக் கைக்கொண்டருளின க்ருபாதிஸயம் என்னை உருக்கா நின்ற தென்கிறார்.
நெருப்புக்கு உஷ்ணம்போலவும் நீர்க்குச்
சீதளம்போலவும் ஆழ்வார்க்கு இக்குணம் இயற்கையானது என்னுங் கருத்துத்தோன்ற
‘ஆண்டிடுந் தன்மையான் என்றசொல்லழகு நோக்குமின்.
No comments:
Post a Comment