Thursday 1 September 2016

ஆழ்வார்கள் போற்றிய நாம வைபவங்கள்

தமோதரா என்று மகனை அழையுங்கள்  

நாடு நகருமரிய மானிடப்பேரிட்டு 
கூடியழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே 
சாடிரப்பாய்ந்த தலைவா தாமோதராவென்று 
நாடுமின் நாரணன் தம்மன்னை நரகம்புகாள்.

 பொருள் - உங்கள் குழைந்தைகளுக்கு "தாமோதர" என்று பெயரிட்டு 
அழையுங்கள். சகடாசுரனை அழித்த "தலைவா" என்று கூப்பிடுங்கள். 
அவ்வாறு அழைத்தால் உங்களுக்கு நரகம் இல்லை என்று தாய்மார்களுக்கு ஆழ்வார் அறிவுரை கூறுகிறார். மனிதனின் பேர் இட்டால் மீண்டும் 
மீண்டும் பிறவி எனும் குழியில் விழ வேண்டும் என்கிறார். 

                                                      ஆழ்வார் திருவடிகளே சரணம்

Friday 19 August 2016

ஆழ்வார்களின் நாம வைபவம்

கண் பெற்ற பயன் 
 தேட்டருந்திறல் தேன்னினைத் தென்னரங்கனை திருமாதுவாழ் 
வட்டமில் வனமாளைமார்வனை வாழ்த்திருமால் கொள்சிந்தையராய் 
ஆட்டமேவியலர்ந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் தம் 
ஈட்டங்கண்டிடக் கூடுமேல் அதுகாணும் கண்பயனாவதே.

பொருள் - திருமாலின் திருநாமங்களைக் கூறி மெய் மறந்து 
ஆடும் உன்னையான அடியார்களின் குழாமைக் கண்டு வணங்கும் 
பாக்கியம் கிட்டுமேயனால், அதுவே தான் கண்ணைப் 
பெற்றதற்கான முழுப்பயனகக் கருதுகிறேன்
 என்கிறார் ஆழ்வார்.....

ஆழ்வார்கள் போற்றிய நாம வைப்பவன்.

ஆழ்வார்கள் போற்றிய நாம வைபவம் 
மகனை மாதவா என்று பெயரிட்டு அழைத்தல் 
நரகமில்லை.
1 - மானிடசாதியில் தொன்றிற்றோர் மானிட சாதியை 
மாநிடசாதியின் போரிட்டால் மறுமைக்கில்லை 
வானுடைமாதவ! கோவிந்த! வேன்றழைதத்க்கள் 
நானுடை நாரணன் தம்மன்னை நரகம்புகாள் 

மனிதசதியில் தோன்றிய மனிதக் குழந்தைக்கு, மனிதனின் பெயரை இட்டு அழைத்தல் மறு பிறப்பில் மோட்சமடைய வழியில்லை.
               'மாதவா கோவிந்த என்று அவன் நாமத்தை இட்டு அழைத்தால், அவர்தம் அன்னை நரகம் புகமட்டாள்.

Tuesday 2 August 2016

ஐந்து செம்பொருட்கள்

எம்பார் ஜீயர் சுவாமிகள் அருளியது 
அறியுடைய ஆத்மாக்கள் யாராயினும்,  அறிய வேண்டிய செம்பொருள்கள் ஐந்தையும் இருபது திருவாய்மொழிகளில்
தெளிவுறுத்தியுள்ளார் நம்மாழ்வார். இவையே வேதம் காட்டும் செம்பொருள் ஐந்து.
  1. அவரவர் தமதமது அறிவறி வகை இறைநிலை பல; அவற்றுள் மிக்க இறைநிலை எது? பெண்மை கலந்த ஆண்மை நிறைந்த திருமால் தத்துவம் .
  2. அறிவுள்ள மனிதன் தன் உண்மை நிலை எது ? உயிர்நிலை பற்றிப் பல கருத்துக்கள் இருப்பினும் அவற்றுள் மெய்யாம் உயிர்நிலை எது ? திருமால் அடியான் என்பதே.
  3. பகுத்தறிவு படைத்த மனிதனுக்கு பல நெறிகள் உண்டு. அவற்றுள் உயிரின் உய்வுக்கு ஏற்கத்தக்க நெறி யாது? உடல் பிணிப்பிலிருந்து விடுபட்டு இறைவன் பிடிப்பில் ஆட்படுதல்.
  4. தக்க நெறியில் செல்லும் பெருமக்களுக்குத் தடையாகியத் தொக்கியலும் ஊழ் வினைகள் எவை? அவை பற்றி அறிதலும் வேண்டும். ஆக்கை வழி உழலாமல் ஆன்மிக அறநெறி நடத்தல்.
  5. அறிவறிந்த மக்கள் பெரும் உயரிய நல்வாழ்வு எது? இறை உணர்வுடன். "தெரிந்து, எழுதி, வாசித்து, கேட்டு , வணங்கி வழிபட்டுப் பூசித்துப்" பொழுது போக்குவதே நல்வாழ்வு.
இவ்வைந்து செம்பொருள் நல்கும் நல்வாழ்வு பற்றிய தெளிந்த ஞானம் அருளுவது, திருவாய்மொழி .
இந்த 'அர்த்த பஞ்சகமே திருமந்திரத்தின் திரண்ட பொருள். திருமந்திர விளக்கமே திருவாய்மொழி'. இதனை 'அறியக் கற்று வல்லார் வைஷ்ணவர் ஆவர்' என்பது நம்மாழ்வார் அளித்த தீர்ப்பு.
என்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Sunday 31 July 2016

எம்பெருமானார் தரிசனம்

திருவாய்மொழி சிந்தனைச் செல்வர், செந்தமிழ் வேதியர், ஸ்ரீ வைஷ்ணவ சிம்மம் , திருமால் ஆசிரியர் 
ஸ்ரீ உ.வே. குமாரவடி சே. இராமாநுஜாசார்யர் 
(தற்போது ஸ்ரீபெரும்பூதூர் அப்பன் பரகால ராமாநுஜ
எம்பார் ஜீயர் சுவாமி )
பண்தருமாறன் பசுந்தமிழ், ஆனந்தம் பாய் மாதமாய் விண்டிட வந்த எங்கள் இராமானுச முனிவேழம், மெய்ம்மை கொண்ட நால்வேதக்கொழுந்தண்டம் ஏந்திக் குவலயத்தே மண்டி வந்து ஏன்றது, வாத்தியர்கள் உங்கள் வாழ்வற்றதே! என்று அமுதனார் வாக்கும் பலித்தது !
முத்தியோ சிலரது சொத்து என இருக்கையில் இத்தமிழ் நாடு தன் அருள் தவப்பயனாய் இராமனுசனை ஈன்ற தன்றோ" என புரட்சிக் கவிஞ்ர் பாரதிதாசனும் பிற்காலத்தில் ஒப்பும்படி மாறன் அடிபணிந்து உய்ந்த இராமானுசன் தமிழகத்தில் வெற்றி கண்டு வீறு நடையிட்டார்.
எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்துள்ளார்
தீதில் நன்னெறியாம் திருமால் நெறி தவிர மனித சாதனைகள் எதனாலும், உயிர்க்குலம் அமைதி காணவியலாது !
கலியின் கோலங்கள், அவலங்கள் அடங்கிட நமக்கு இன்றுள்ள ஒரே வழி, ஆன்மிகத் திராவிடமே, அதாவது திருவாய்மொழி எனும் பகவத் விஷயமே. இறைவனை அறிவதற்கு மட்டுமின்றி அவனது குணங்களில் ஆழ்ந்து அடிமை புரிவதற்கும் ஆனந்த முறுவதற்கும் வையத்து வாழ்வாங்கு வாழ வழி வகுப்பது, செந்தமிழ் வேதம் திருவாய்மொழியே
அந்நூல் பயனை, ஆழ்வாரின் வாக்கிலேயே கூறிமுடிப்போம்
பொலிக! பொலிக! பொலிக!போயிற்று வல்லுயிர்ச்சாபம் 
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை 
கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் 
மண்மேல் மாலியபுகுந்து இசைபாடி ஆடி உழிதரக்கண்டோம் 

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம் 
தொண்டீர்! எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும் 
பொலிக! பொலிக!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Saturday 30 July 2016

முதல் திருமொழி

1. வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
    வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய
    சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
    இடராழி நீங்குகவே என்று

 [வையம் தகளியா.] தகளியாவது-நெய்க்கும் திரிக்கும் ஆதாரமாயிருக்கிற அகல்.(தாளி என்று உலகவழக்கு. பூமியானது கடிந வஸ்துவாயிருப்பதால் அதைத் தகளியாகவும், கடலானது த்ரவ வஸ்துவாயிருப்பதால் அதை நெய்யாகவும், ஸூர்யன் ப்ரகாசஸ்வரூபனாயிருப்பதால் அவனை விளக்காகவும் ரூபித்து அருளிச்செய்கிறார். இங்கு இங்ஙனே ரூபணம் செய்வதன் கருத்து யாதெனில்; சூந்யமே தத்துவமென்றும், உலகம் ஒரு ஈச்வரனையுடையதல்ல என்றும் பலபடியாகப் பகரும் மதாந்தரங்ளை மறுத்து விசித்திரமான பிரபஞ்சத்தை நிருமிக்கவல்ல ஞானசக்தி முதலிய குணங்களையுடைய திவ்விய மங்கள விக்ரஹத்தோடு கூடிய ஸர்வேச்வரன் உளனென்றும் அவனுக்கு அடிமை செய்கையே புருஷார்த்தமென்றும் இப்பா சுரத்தால் விளக்கப்பட்டதாகும்.
ஸூர்யன் சிறிதும் தவறாமல் உதிப்பதும் அஸ்தமிப்பதுமாக நீடுழியாய் நடந்து வருவதானது-விசித்ரசக்தி வாய்ந்த ஸர்வேச்வரனொருவனுளன் என்பதை நமக்கு நன்றாக விளக்குகின்ற தன்றோ. வார்கடலின் நிலைமையும் வையத்தின் நிலைமையும் இவ்வுண்மையையே வற்புறுத்துகின்றன. கடலானது தன்னிடத்தில் பல பல ஆற்றுப் பெருக்குகள் வந்து விழுதலால் நிறைந்து வழிதலாவது, அவை வந்து விழாத காலத்தில் வடிந்து குறை படுதலாவது ஒன்றுமின்றியே எப்போதும் ஸமநிலைமையாகவே யிருந்துகொண்டு எல்லையை மீறாதிருப்பதும், ஐம்பதுகோடி யோஜனை தூரத்தளவும் பரந்து கடினமாயிராநின்ற இப்பூமியானது பெரியவெள்ளத்தில் ஒரு கழற்காய் மிதப்பதுபோல மஹார்ணவ ஜலத்தில் மிதந்துகொண்டிருப்பதும் இவை தம்மைப் படைத்தவொரு முழு முதற் கடவுளின் அற்புதமான சக்தி விசேஷத்தைப் புலப்படுத்துகின்றனவன்றோ. அப்படிப்பட்ட அபாரசக்தியுக்தனான ஒரு ஜகத்காரணபூதன் ஸித்திக்கும்போது அப்பெருமானுக்குக் கைங்கரியம் செய்யவேண்டுதல் முக்கியம்; கைங்கரியம் மாநஸிக மென்றும் வாசிகமென்றும் காயிகமென்றும் மூன்று வகைப்படும்; அவற்றுள் வாசிக கைங்கரியமான பாசுரம் பாடுதலை அடியேன் செய்கின்றேன்; இக்கைங்கரியத்தை இதுவரையில் நான் செய்யக்கூடாதபடி இடையூறாகவிருந்த ஸம்ஸாரத் துன்பத்திரள்கள் இன்றோடு ஒழிந்திடுக-என்றாயிற்று.
முன்னடிகளின் கருத்தை ஊன்றி நோக்குமிடத்தில் இவ்வாழ்வார் அநுமாநத்தினால் ஈச்வரனை ஸாதிப்பதாக ஏற்படுகின்றது; சராசரரூபமான இந்த பிரபஞ்சம் முழுவைதையும் படைத்து நடத்திக்கொண்டு போவதற்குப் பாங்கான வல்லமை வாய்ந்த ஸர்வேச்வரனொருவனுண்டு என்பதை வையம் கடல் ஸூர்யன் என்ற மூன்று பொருள்களின் நிலைமையைச் சொல்லுகிற முகத்தினால் ஸமர்த்தித்தபடியால் அநுமாநத்தாலே ஈச்வரனை ஸாதிக்கிற தார்க்கிகர்களின் படியை அடியொற்றினாராகிறார்; இதுகூடுமோ? சாரீரகமீமாம்ஸையில் சாஸ்த்ரயோநித்வாதிகரணத்தில் அநுமாநத்தால் ஈச்வரனை ஸாதிக்கலாகாதென்று மறுத்து வேதப்ரமாணமொன்றினாலேயே ஈச்வரனுடைய உண்மையை உணரவெணுமென்று ஸ்தாபித்திருப்பதற்கு மாறாக இஃது இருக்கின்றதே! என்று சிலர் சங்கிக்கக்கூடும்; வேதத்துக்கு விருத்தமாக அநுமாநங்கொண்டு ஸாதிப்பதை அங்கு மறுத்துரைத்த மாத்திரத்தினால் வேதத்துக்கு விருத்தமல்லாத அநுமாநங் கொள்வதில் பிசகுள்ளதாக நினைக்கலாகாது . இது ஸ்ரீபாஷ்யாதி ஸம்மதமுமாம் விரிப்பிற் பெருகும்.

Saturday 28 May 2016

கண்டு கொண்டென்னை, கண்ணிநுண் சிறுதாம்பு



கண்டு கொண்டென்னைக் காரிமா றப்பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண்டி சையு மறிய இயம்புகேன்
ஒண்ட மிழ்ச்சட கோப னருளையே.

Asmath Gurubyo Nama; 


***- கீழ்ப்பாட்டில் “நன்புகழேத்தவருளினான்” என்றவிடத்துக் கூறிய புகழேத்துகையாவது இதுதான் என்று இப்பாட்டில் வெளியிடுகிறார்: ஆழ்வார் திருவாய்மொழி பாடவல்லவர், எம்பெருமானையும் வசப்படுத்தவல்லவர் இத்யாதியாகவுள்ள அவருடைய புகழ்களை நான் ஏத்துகிறவனல்லன்; பாவங்கள் கூடுபூரித்துக்கிடந்த அடியேனைப் பரமபரிசுத்தனாக்கி ஆட்கொண்ட பெருமையாதொன்றுண்டு. இதற்குமேல் வேறொருபெருமை ஆழ்வார்க்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை; அந்தப் பெருமையையே நாடெங்குமறியப் பறையடிக்கின்றேன் என்கிறார்.

கண்டுகொண்டு என்றவிடத்தில் கொண்டு என்பது துணைவினையன்று; கண்டு என்றும் கொண்டு என்றும் இரண்டும் தனித்தனி வினையெச்சங்கள். என்னைக் கடாக்ஷித்து, என்னுடைய துர்க்கதியே பற்றாசாக என்னை அங்கீகரித்தருளி என்றபடி. “இருந்தான் கண்டுகொண்டு எனதேழை நெஞ்சாளும்” என்று ஆழ்வார் பகவத் விஷயத்திலே அநுஸக்தித்தவாற்றை இவர் ஆழ்வார் விஷயத்திலே அநுஸந்திக்கிறார்.
காரி மாறன் - ஆழ்வாருடைய திருத்தகப்பனார்க்குப் பொற்காரியார் என்று திருநாமம். ஆழ்வார் உலகநடைக்கு மாறாயிருந்ததால் மாறன் எனத்திருநாமம் பெற்றார். மாறன் பிரான், மாறப்பிரான்; “சில விகாரமா முயர்திணை” (நன்னூல்).

பண்டை வல்வினையாவது-பகவச்சேஷத்வத்துக்கு எல்லைநிலம் பாகவதஸேஷத்வமென்று அறியப்பெறாமை.  பாகவத விஷயத்தை விலக்கிப் பகவானளவிலே பண்ணும் பக்தியைப் பாபமென்றிறே நம் ஆசாரியர்கள் அருளிச் செய்வது. 

“***“ = பரதேந ததாநக:” என்றவிடத்து அநக: என்பதற்கு வியாக்கியானம் ஸேவிக்க.

பாற்றி - பாறச்செய்து; பாறுதல் உருமாய்ந்தொழிதல்: பாறு என்ற வினைப்பகுதியடியாப் பிறந்து பிறவினையில் வந்த வினையெச்சம்.
அறியவியம்புகேன் =   “அறியச் சொன்னவாயிரம்” என்று-ஆழ்வார் உலக மறியத் திருவாய்மொழி சொன்னாப்போலே நான் உலகமறிய அவரது அருளைச் சொல்லுகிறேன் என்கிறார். “தமிழ்ச் சடகோபன்” என்றது தமிழையே நிரூபகமாகவுடைய ஆழ்வார் என்றபடி.

இன்று தொட்டு, கண்ணிநுண் சிறுதாம்பு




Asmath Gurubyo Nama:

இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான்
நின்று தன்புக ழேத்த வருளினான்
குன்ற மாடத் திருக்குரு கூர்நம்பி என்று
மென்னை யிகழ்விலன் காண்மினே.


Vilakkurai ; 
***- “     சதிர்த்தேனின்றே” என்று பரமாநந்தமாக அருளிச்செய்த மதுரகவிகளை நோக்கி ‘நீர் சதிர்த்தபடி என்?’ என்று கேட்க, இன்றுமுதலாக இனி மேலுள்ள காலமெல்லாம் ஆழ்வாருடைய திவ்யகுணங்களையே நான் பாடித் திரியும்படி அவ்வாழ்வாரால் க்ருபை பண்ணப்பெற்றேன்; இவ்வளவேயுமின்றி, ஒருகால் நான் ஆழ்வாரை இகழ்ந்தாலும் அவர் என்னை இகழமாட்டாரென்னும்படி அவ்வளவு பரமகிருபைக்குப் பாத்திரமாயினேனே! இதற்கு மேற்பட்ட சதிர் உலகத்திலுண்டோ? என்கிறார்.

பகவத் விஷயத்தை ஆஸ்ரயிப்பது ஒருகாலமும், பலன் கைகூடுவது வேறொரு காலமுமாயிருக்கும்; அதுபோலன்றியே ஆழ்வாரை அஸ்ரயித்த இன்றுமுதலாகவே எனக்குப் பலன் கைகூடிற்றுக் காண்மின் என்பார் இன்றுதொட்டும் என்கிறார். எழுமையும்-ஏழு ஜந்மங்களிலும் என்றது உபலக்ஷணமாய் மேலுள்ள காலமெல்லாம் என்றபடி. இகழ்விலன்-இனி நான் வேறொருவரைத் தேடி ஓடும்படி என்னை இனி எக்காலத்திலும் ஆழ்வார் கைவிடமாட்டார் என்கை. காண்மினே-இது ப்ரத்யக்ஷமாகக் காணக்கூடியதாயிருக்க ஆழ்வார் பெருமையை நான் சொல்லக் கேட்கை மிகையன்றோ?

நம்பி னேன்பிறர் நன்பொருள் தன்னையும். கண்ணிநுண் சிறுதாம்பு


                        

Asmath Gurubyo Nama:

நம்பி னேன்பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பி னேன்மட வாரையும் முன்னெல்லாம்
செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்
கன்ப னாய்அடி யேஞ்சதிர்த் தேனின்றே.
  விளக்க உரை :

***- ஸத்துக்கள் உம்மைக் கைவிடும்படி உம்பக்கல் என்ன புன்மையிருந்ததென்ன; அநாதிகாலமாகப் பரத்ரவ்யாபஹாரமும் பரதாரபரிக்ரஹமும் பண்ணிப்போந்தேன் என்று முன்னிரண்டடிகளாற் கூறியபின்னர், ‘இப்போது எப்படியிருக்கிறீர்?’ என்று கேட்க, இப்போது ஆழ்வாருடைய அருளுக்கு இலக்காகப்பெற்றுச் சதிரனாய்விட்டேன் என்கிறார் பின்னிரண்டிகளால்.

முதலடிக்கு- அயலாருடைய பொருள்களைக் களவுசெய்தேன் என்று ஸாமாந்யமாகப் பொருளாயினும் நன்பொருள் என்ற ஸ்வாரஸ்யத்தால் இங்கு ஆத்மாபஹாரம் பொருளாகக்கடவது.  ஈச்வரனுக்கு மேஷபூதமான விலக்ஷண ஆத்மவஸ்துவை யென்னுடையதாக அபிமாநித்திருக்கையாகிற ஆத்மாபஹாரக்களவைச் செய்துபோந்தேன் என்கை.

“***“-யோந்யதாஸந்தமாத்மாநம ந்யதா ப்ரதிபத்யதே! கிம்தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாபஹாரிணா’ என்றதை இங்கு அநுஸந்திக்க.

“***“-உத்தம: புருஷஸ்த்வந்ய?” என்கிற ப்ரமாணச்சாயையாலே எம்பெருமானைப் பிறர் என்கிறது.  இப்படி ஆத்மாபஹாரம் பண்ணினே னாகையால் அதற்குப் பலமான விஷய ப்ராவண்யப் படுகுழியிலே விழுந்தேனென்கிறார் இரண்டாமடியில்; பகவத் பாகவதவிஷயத்திலே வைக்கவேண்டிய மஹாவிஸ்வாஸத்தை மின்னிடை மடவார் திறத்திலே வைத்தேனென்கிறார்.
நம்பிள்ளை ஈடு:- “ரத்நாபஹாரம்பண்ண அஞ்சாதவன் விறகும் வைக்கோலும் களவுகாண அஞ்சுமோ? ஈஸ்வரன் ‘என்னுடையது’ என்று அபிமாநித்திருந்த (ஆத்ம) வஸ்துவை அபஹரித்தவன், ஸாமாந்யர் ‘என்னது” என்று அபிமாநித்திருக்கும் வஸ்துவை அபஹரிக்கச் சொல்லவேணுமோ?”
நம்புதல்-விரும்புதல்; “நம்பும் மேவும் நசையாகும்மே.”
இப்படியிருந்த நீர் ஆழ்வாரைக்கிட்டினபடி எங்ஙனே? என்று கேட்க; மடவார்களை ஆராதிப்பதற்காகப் பொருள்தேடிக் கொள்ளையடிப்பதற்கு இடம் பார்த்துத் திரியாநிற்கையில் அச்செம்பொன் மாடத்தைக் களவுகாணப் போனேன்; அங்கே வைத்தமாநிதியைக்கண்டு அகப்பட்டேனென்கிறார்; இவர்க்கு வைத்தமாநிதி ஆழ்வாரேயாம்.
சதிர்த்தேன்-க்ருதக்ருத்யனானேன் என்றபடி. சதுர என்ற வடசொல் சதிர் எனத்திரிந்து அது அடியாகப்பிறந்த வினைமுற்று இது.

நன்மை யால்மிக்க. கண்ணிநுண் சிறுதாம்பு




Asmath Gurubyo Nama:
நன்மை யால்மிக்க நான்மறை யாளர்கள்
புன்மை யாகக் கருதுவ ராதலின்
அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்
தன்மை யான்சட கோபனென் நம்பியே.


முதற்பாட்டில் எம்பெருமானைவிட்டு ஆழ்வாரையே பற்றினதாகக் கூறின நீர் ‘ஆழ்வாருகந்தவிஷயம்’ என்பது பற்றி பகவத் விஷயத்தை விரும்புவானேன்? ஆழ்வார் உகந்தால் நீரும் உகக்கவேணுமோ? என்று சிலர் கேட்க; ஸகல வைதிகர்களாலும் ‘இது அபதார்த்தம்’ என்று கைவிடப்பட்ட அடியேனை யாவரொரு ஆழ்வார் விசேஷமாகக் கடாக்ஷித்தருளி ஸகலவித பந்துக்களும் செய்யக் கூடிய காரியத்தைத் தாமொருவராகவே அடியேன் திறத்துச் செய்தருளிப் பொருளல்லாத வென்னைப் பொருளாக்கியருளினாரோ அவ்வாழ்வாரன்றோ எனக்குத் தலைவர்; அவர் உகந்தவிஷயத்தை நான் உகவாதொழிந்தேனாகில் ஆழ்வார் என்னை அங்கீரித்தருள்வதற்கு முன்பு நான் நின்றநிலைக்கும் இப்போதைய நிலைமைக்கும் என்ன வாசி உள்ளதாம்? என்ற  கருத்துத்தோன்ற அருளிச்செய்கிறார்.
(நன்மையால் மிக்க) என்னை இகழ்ந்து கைவிட்டவர்கள் ஸாமாந்ய புருஷர்களல்ல; நன்மையால்மிக்க நான் மறையாளர்களாய்த்துக் கைவிட்டது; அதாவது- ஒருவனிடத்தில் சில குணங்களும் சில தோஷங்களுங்கிடந்தால் தோஷாம்ஸங்களைத் தள்ளிவிட்டுக் குணபாகங்களையே நோக்கிக் கைக்கொள்ளுதல், ஸ்வல்ப குணமுமில்லாமல் தோஷங்களே கூடு பூரித்துக்கிடந்தாலும் அக்குற்றங்களையே நற்றமாகக் கொண்டு கைக்கொள்ளுதலாகிற நன்மையிற் சிறந்தவர்களாய், இவ்வளவு ஆத்மகுணபூர்த்தி உண்டாவதற்கு ஈடாக நான்கு வேதங்களிலும் வ்யாஸபதம் செலுத்த வல்லவர்களான பெரியோர்களுக்கும் தமது நன்மையைக்கொண்டு என்னைக் கைக்கொள்ள முடியாதபடி மஹாபாபியாய்க் கிடந்தேனென்னு மிவ்வளவையே காரணமாகக்கொண்டு ஆழ்வார் கடாக்ஷித்தருளினார் என்கை. “நன்மையால்மிக்க நான்மறையாளர்” என்பதற்குப் பொருந்தியவர் கூரத்தாழ்வான் ஒருவரே என்று நம்முதலிகள் அனைவரும் ஒருமிடறாக அருளிச்செய்வர்களாம். கூரத்தாழ்வான் இகழ்ந்து கைவிடும்படியான ஜந்து உலகத்திலேயே கிடையாது; அப்படிப்பட்ட கூரத்தாழ்வானும் இம்மதுரகவிகளைக் கண்டால் விலக்கித் தள்ளும்படியாக அத்தனை ஹேயவஸ்துவாய்த் தாமிருந்ததாக நைச்யாநுஸந்தாநம் பண்ணிக்கொள்ளுகிறபடி.

(புன்மையாகக்கருதுவர்) புன்மை என்பது பண்புப்பெயர் (தர்மம்); புல்லியன் என்பது பண்பி (தர்மி); புல்லியன் (-க்ஷூத்ரன்) என்று என்னைக் கருதுவர் என்ன வேண்டியிருக்கப் ‘புன்மையாகக் கருதுவர்’ என்றது- புன்மை என்று வேறொரு ஆதேயவஸ்நுவும் புல்லியன் என்று வேறொரு ஆதார வஸ்துவும் கிடையாது; புன்மையே மதுரகவியாக ஒரு உருவை யெடுத்துக் கொண்டு வந்திருக்கின்றதென்று கருதுவர் என்றபொருள் தோன்றுவதற்காம். இவ்விடத்தில் விவக்ஷிதமான புன்மை மேற்பாட்டில் விசதம்.
கருதுவர்= காலவழுவமைதி; “விரைவினு மிகவினுந் தெளிவினுமியல்பினும், பிறழவும்பெறூஉமுக் காலமுமேற்புழி” என்பது நன்னூல்.

ஆதலில் = அனைவருங் கைவிட்டதுதானே ஹேதுவாக என்றபடி. ‘இனி இம்மதுரகவிக்கு நாமல்லது ரக்ஷகரில்லை’ என்று தம்முடைய க்ருபாமாத்ரப்ரஸந்நாசாயத்வத்தை வெளியிட்டுக்கொண்டு என்னை ஆண்டாரென்கிறார். 
நான்வேறு போக்கடியற்று ‘ஆழ்வார் திருவடிகளே சரணம்’ என்று அடைக்கலம் புகுந்த பின்பு ஆழ்வார் என்னை  ஆண்டருளினாராகில் அதற்கு நான் அவ்வளவாக உருகமாட்டேன்; என்னுடைய இசைவு இல்லாதிருக்கவும் தாமே என்னுடைய புகலறுதியைப் பார்த்துக் கைக்கொண்டருளின க்ருபாதிஸயம் என்னை உருக்கா நின்ற தென்கிறார்.
நெருப்புக்கு உஷ்ணம்போலவும் நீர்க்குச் சீதளம்போலவும் ஆழ்வார்க்கு இக்குணம் இயற்கையானது என்னுங் கருத்துத்தோன்ற ‘ஆண்டிடுந் தன்மையான் என்றசொல்லழகு நோக்குமின்.

Swamy Aalavandaar Aruliya Chtussloki Mp3.

AshtabhujAshtakam Swamy Vedanta Desikan Aruliyathu.

Thirupaanazhwar's Amalanaathipiran.

Friday 27 May 2016

அப்பம் கலந்த சிற்றுண்டி.பெரியாழ்வார் திருமொழி



Asmath Gurubyo Namaha.

அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான்சுட்டு வைத்தேன் தின்ன லுறிதியேல் நம்பீ
செப்பிள மென்முலை யார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான்இங்கே வாராய்.



இப்பையல் அழுக்குடம்பனாயிரா நின்றான்என்று இடைச்சிகள் ஏசுவதற்கு இடமறும்படி நீராட வருவாயாகில் வேண்டிய பஷணங்கள் தருவேனென்கிறான்.  அப்பம் – ‘அபூபம்என்ற வடசொற்சிதைவு.  சிறுமை + உண்டி சிற்றுண்டி.  “ஈறுபோதல்..தன்னொற்றிரட்டல்” “சிற்றுண்டைஎன்றும் பாடமாம்.  (“சிறுபுறம்என்றவிடத்தில்) சிறு – ‘சிறுமைஎன்ற பண்பினடி. புறம் பேசுதல் மறைவில் குற்றத்தைச் சொல்லுதல்.

கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து. பெரியாழ்வார் திருமொழி



Asmath Gurubyo namaha.

கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச வாய்முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகை யும்நாறு சாந்தும்
அஞ்சன மும்கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய்.

உன் திருமேனிக்கு வேண்டுமவற்றை எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன், நீராட வா என்றழைக்கிறாள். உனது அழகு கெடாதபடி  நீ நீராடவேணுமென்பதற்காக அழகனே! என்கிறாள்

பேய்ச்சி முலையுண்ணக்.பெரியாழ்வார் திருமொழி


Asmath Gurubyo namaha.

பேய்ச்சி முலையுண்ணக் கண்டு பின்னையும் நல்லாதுஎன் னெஞ்சம்
ஆய்ச்சிய ரெல்லாம் கூடி அழைக்கவும் நான்முலை தந்தேன்
காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ்மணி வண்ணா மஞ்சன மாடநீ வாராய்.

உனக்கு முலைகொடுத்த பேய்ச்சி பட்டபாட்டை நானறிந்து வைத்தும், நாமும் அப்பாடுபடவேண்டி வரப்போகிறதே என்று அஞ்சி ஓடவேண்டி இருக்க அது செய்யாமல்,
மற்றும் அச்சமுறுத்துகிற இடைச்சிகளின் பேச்சையும் கேளாமல் உனக்கு நான் முலைதந்தது அன்பினாலன்றோ? அதற்கிணங்க நீ நான் சொல்லிற்றைக் கேட்கவேண்டவோஎன்கிறாள்.

 நெல்லி நெல்லியிலை.  காய்ச்சின நீரோடு நெல்லி நெல்லியோடு காய்ச்சின நீர் என உருபு பிரித்துக் கூட்டப்பட்டது.  கடாரம் கடாஹம். பூரித்த வடமொழித்தாது வடியாப் பிறந்த வினையெச்சம்

கன்றுக ளோடச். பெரியாழ்வார் திருமொழி

Asmath Gurubyo Namaha.

கன்றுக ளோடச் செவியில் கட்டெறும் புபிடித் திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய் நீபிறந் ததிரு வோணம்
இன்று நீநீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய்

கன்று உண்டானால் பசு கறக்கலாம், பசுவைக் கறந்தால் பாலுண்டாகும், பாலுண்டானால் வெண்ணெயுண்டாகும், ஆகவே, வெண்ணெய் வேணுமென்றால், கன்றுகள் அவசியம் வேணும்,
அக்கன்றுகள் வெருண்டோடுவதைக் காண்கைக்காக நீ அவற்றின் காதுகளில் கட்டெறும்பைப்  பிடித்துப் புகவிட்டால் அவை காணமுடியாதபடி ஓடிப்போய்விடுமேபின்பு உனக்கு இஷ்டமான வெண்ணெய் கிடைக்கும்படி யெங்ஙனே? என்பது முதலிரண்டடிகளின் கருத்து. 
வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்’  என்ற தொடர் வெண்ணெய் விழுங்கக் கிடைக்காது என்ற கருத்தைக் காட்டும், இது ஒருவகை எதிர்மறை இலக்கணை, பிற குறிப்பு, – ‘ஆறுஎன்பதன் விகாரம்.

(மராமரம் சாய்த்தாய்.) ராமாவதாரத்தில் ரிச்யமூகபர்வதத்தில் ஸுக்ரீவனுக்குத் தன் வலியின் மிகுதியைக் காட்ட ஏழு மராமரங்களை ஒருங்கே எய்தவனென்ற வரலாறு காண்க

வெண்ணெ யளைந்த குணுங்கும் பெரியாழ்வார் திருமொழி.

Asmath Gurubyo Namaha.

வெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டுஇங்கு எத்தனை போதும் இருந்தேன்
நண்ண லரிய பிரானே நாரணா நீராட வாராய்.


கண்ணபிரான் * தாரார்தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி வெண்ணெயளைந்ததனால் உடம்பெல்லாம் அவ் வெண்ணெய்பட்டு மொச்சைநாற்றம் வீசும்..  அதனோடு விளையாடப் போனால் அதன்மேல் புழுதியும் படியும

இவ்விரண்டும் உடம்பிலிருந்தால் தினவுதின்னும்அதற்காகக் கண்ணன் உடம்பைப் படுக்கையிலே தேய்ப்பானாம், இப்படி எல்லாம் வருந்துவதைப் பொறுக்கமாட்டாமல் நீராடவழைக்கின்றனளென்க,  

விளையாடுபுழுதி வினைத்தொகை, விளையாடின புழுதியென விரிக்க, ‘உண்ட இளைப்புஎன்றவிடத்துப் போல, விளையாடியதனால் தோன்றிய புழுதியென்க. 

புளிப்பழம் எண்ணெயைப் போக்குவதாய்ப் புளிப்புச் சுவையுடையதாய் இருக்கின்ற ஒருவகைப் பழத்தைக் குறிக்குமென்பர், சீக்காயைக் காட்டு மென்பாருமுளர். எள் + நெய் = எண்ணெய்

Thursday 26 May 2016

திரிதந் தாகிலும். கண்ணிநுண் சிறுதாம்பு


Asmath Gurubyo Namaha.
Shrimathe Ramanujaya Namaha.

திரிதந் தாகிலும் தேவ பிரானுடை
கரிய கோலத் திருவுருக் காண்பன்நான்
பெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள்
உரிய னாய்அடி யேன்பெற்ற நன்மையே


VILAKKURAI :  தேவுமற்றறியேன” என்றார் கீழ்ப்பாட்டில்; இதில் தேவுமற்று அறிவேன் என்கிறார். ஆழ்வார் பற்றின விஷயமென்று அவ்வழியாலே பற்றலாகும் என்கிற ரோஸ்த்ரார்த்தத்தை விளக்குகிறபடி.  “விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” என்றாளிறே ஆண்டாளும். ஆணையின்மேலே ஏற  நினைப்பார்

தாமாக ஏறப்புக்கால் உதைபடுவர்; விரகறிந்த பாகன் மூலமாக ஏறினால் அது முறைமையாகும்; அப்படியேயாய்த்து பகவத்விஷயப்பற்றும்.
“திரிதந்தாதிலும்” என்றதைத் “திரிதந்தேனாகிலும்” என்பதன் மரூஉ மொழியாகக் கொண்டு உரைக்கப்பட்டது. அன்றி, வினையெச்சமாகவே கொண்டு உரைத்தலுமொன்று. 

திரிதருதலாவது திரும்பிவருதலாய், எம்பெருமானை விட்டு ஆழ்வாரளவும் போன  நான் திரும்பி எம்பெருமானளவிலே வந்தாகிலும் என்றாம் திருவாய் மொழிப் பாவைவிட்டு இசைகளை விட்டு ஆழ்வாரையும் விட்டு ‘அவருகந்த விஷயம்’ என்று ப்ரதமபர்வத்திலே திரும்பிவந்தாகிலும் என்றபடி.

“திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருக் காண்பன்  நான்” என்றவாறே, சிலர் மதுரகவிகளை நோக்கி “என்சொன்னீர்! என் சொன்னீர்? விட்டொழிந்த படுகுழியில் மீண்டும் விழுந்தீரே” என்றுகூற, பின்னடிகளால் அவர்கட்கு உத்தரம் அருளிச் செய்கிறார். தேவபிரானுருவை நான் காண்பதானது என்னுடைய முயற்சி மூலமாக நேர்ந்ததாகில் எனக்கு இது தீமையேயாகும்; ஆழ்வார் திருவடிகளிலே நான் அடியனாயிருந்துவைத்து அவர் வழியாலே பெற்றதாகையால் இது நன்மையேயாம் என்றவாறு.


“தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருவைத் திரிதந்து நான் காண்பனாகிலும் (அது) பெரியவண்குருகூர் நகர்நம்பிக்கு அடியேன் ஆளுரியனாய்ப்பெற்ற நன்மையாகுமேயன்றித் தீமையாகாது” என்றுமாம்

Wednesday 25 May 2016

Asmath Gurupyo namaha. தேவு மற்றறியேன்

GURUREVA PARAPBAMMA. 
நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்
மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி
பாவி னின்னிசை பாடித் திரிவனே

Vilakkurai :

                  

தம்முடைய மநோவாக்காயங்களென்ற மூன்று கரணங்களும் ஆழ்வார் விஷயத்திலேயே ஏகாக்ரமாக ஈடுபட்டபடியை அருளிச் செய்கிறார் இதில். நான் என்னுடைய நாக்கைக்கொண்டு அப்ராப்தமான பகவத் விஷயத்திலே செலுத்தாமல் ப்ராப்தசேஷியான ஆழ்வாரைத் துதிப்பதிலே செலுத்திப் பரமாநந்த மடைந்தேன்; என் தலை படைத்த ப்ரயோஜநம் பெறும்படி தலையை ஆழ்வார் திருவடிகளிலே மடுத்தேன்; இது ஸத்யம்.
தேவுமற்றறியேன் என்பதனால் நெஞ்சின் காரியஞ் சொல்லுகிறார்; நம்மாழ்வாரையொழிய தெய்வமாக நினைக்கமாட்டாது என்மனம்; நம்மாழ்வாரையே பரதேவதையாகக்கொண்டேன் என்கிறார். முதலடியிலே சொன்ன நாவின் காரியத்தை மீண்டும் விசேஷித்துக் கூறுகிறார். குருகூர் நம்பி இத்தியாதியால். எப்போதும் நம்மாழ்வாருடைய திவ்ய ப்ரபந்தங்களையே இனிய இசையுடன் பாடிக்கொண்டு திரிவேனேயன்றி, அவ்வருளிச்செயலைத் தவிர்த்து ஸந்த்யாவந்தந மந்த்ரத்தையும் இந்த நாக்கினால் உச்சரிக்கமாட்டேன் என்கிறாராகக்கொள்க.
இங்கே ஒரு சங்கை பிறக்கக்கூடும்; அதாவது-தேவுமற்றறியேன்;” என்று இவர் எம்பெருமானை ஒதுக்கித் தள்ளுகிறபடியானால் அவ்வெம்பெருமானே தெய்வமென்று கொண்டாடுகிற அருளிச்செயல் மாத்திரம் இவர்க்கு உபாதேயமாகலாமோ? பகவத்விஷயத்தை உதறிவிட்டு ஆழ்வாரையே பற்றின விவர் அந்த ஆழ்வாருடைய பெருமையைப் பேசவல்ல பிரபந்தத்தை யேயன்றோ பாடிக்கொண்டு திரியவேணும் - என்று. இச்சங்கைக்கு முதற்பாட்டின் உரைத்தொடக்கத்திலேயே ஸமாதாநங் கூறப்பட்டுள்ளமை காண்க. சரமபர்வ நிஷ்டர்க்கு பகவத்விஷயம் ஸர்வாத்மநா ஹேயமன்று; தம் ஆசிரியர் உகந்த விஷயமென்று அவ்வழியாலே பற்றுகை ஸ்வரூபாநுரூபமென்றும் ஸ்வேச்சையாலே பற்றுகை விருத்தமென்றும் இவ்வளவேயுள்ளது.
இங்கு, “குருகூர்நம்பி பாவைப் பாடித் திரிவன்என்னாமல், ‘பாவின் இன்னிசை பாடித் திரிவன்என்றதற்கு நஸோக்தியாக நஞ்சீயரருளிச் செய்யும் படி:- ஐச்வர்யத்தை அல்பாஸ்திரமென்று கழித்து ஸ்திரமான ஆத்மப்ராப்தியை அபுருஷார்த்தமென்று கழித்து, ஸ்திரமுமாய்ப் பரமபோக்யமுமான பகவத் ப்ராப்தியை ப்ராப்யத்தில் ப்ரதமாவதியென்று கழித்து, இதில் சரமாவதியான ஆழ்வாரையும் உத்தேச்யரன்றென்று கழித்து, அவரோடு  ஸம்பந்தித்த விஷயத்தையும் ரஸாச்ரயமன்றென்று கழித்து, அத்தோடு ஸம்பந்தித்த இசையே தமக்கு உத்தேச்யமென்கிறார். தெய்வத்தண்ணந் துழாய்த்தாராயினுந் தழையாயினும் தண்கொம்பதாயினும் கீழ்வேராயினும் நின்ற மண்ணாயினுங்கொண்டு வீசுமினேஇத்தியாதியிற்படியே பகவத்ஸம்பந்தம் கழியக்கழிய நிறம் பெறுகிறபடி.
பாடித்திரிவனே என்ற சொல்நயத்தால், ஆழ்வாரருளிச்செயலைப் பாடவே தான் எனக்கு உடம்பில் வலிவு உண்டாகி ஸஞ்சரிக்கவல்லசக்தி உண்டாகிறது என்னுங்கருத்துத் தோன்றும். ரஸாயநஸேவை பண்ணித்திரிவாரைப்போலேஇதுகாணும் இவர்க்கு தாரகமாய் இவரை ஸஞ்சரிக்கப் பண்ணுகிறது
நாவாயிலுண்டே நமோ நாரணாவென்று ஒவா துரைக்கு முரையுண்டேஎன்றும், “என்நாவிலின்கனி யானொருவர்க்குங் கொடுக்ககிலேன்என்றும் மற்றையாழ்வார்கள் பகவத் விஷய ஸ்துதியையே தமது நாவுக்குப் பயனாக நினைத்திருப்பர்; “அடியையடைந் துள்ளந்தேறி, ஈறிலின் பத் திருவெள்ளம் யான் மூழ்கினன்என்று பகவத் விஷயாவகாஹநத்தையே தமக்குப் பேரின்பமாக நினைத்திருப்பர்; “கோலமாமென் சென்னிக்கு உன் கமலமன்ன குரைகழலேஎன்று பகவத் பாதஸேவையையே தமது தலைக்குப் பேறாக நினைத்திருப்பர்; “கண்ணனல்லால் தெய்வமில்லைஎன்று அவனையே தெய்வமாக நினைத்திருப்பர்;  இந்த ப்ரதிபத்திகளெல்லாம் மதுரகவிகளுக்கு ஆழ்வார்திறத்திலே யாமென்பதை இப்பாட்டில் உய்த்துணர்க.
நம்பிள்ளை யீடு:- குருகூர்நம்பிபாஎன்றது -கண்ணி நுண் சிறுத்தாம் பென்னுதல்; திருவாய்மொழி என்னுதல். திருவாய்மொழி தன்னில் பலகாலும் குருகூர்ச்சடகோபன்என்றாரிறே; அவ்வழியாலேயாய்த்துத் திருவாய்மொழி தன்னையும் இவர் ஆதரிப்பது.
மெய்மையே= ஆழ்வார் நீசஜாதியிற் பிறந்தவராதலால் அர்ச்சையில் அவர் ஆதரிக்கத்தக்கவரே யன்றி விபவத்தில் ஆதரிக்கத்தக்கவரல்லர்; மாதா புத்திரனுக்கு நமஸ்கரணீயையாயினும்  பஹிஷ்டையாயிருக்குங் காலத்திலே அவள் எப்படி நமஸ்கரிக்கத்தகாதவளோ அப்படி தான் நீசஜாதீயரான ஆழ்வார்கள் விபவத்திலே அநாதரணீயர்என்று பிதற்றும் த்ரமிடோபநிஷக்குத்ருஷ்டிகளின் மிடற்றைப் பிடித்தாற்போலே அருளிச் செய்கிறபடிபாரீர்.
மதுரகவிகள் ப்ராஹ்மணோத்தமராயிருந்துவைத்து, ஆழ்வாருடைய விபவதசையிலே அவர்க்கு நான் ஸகலவித  பரிசர்யையும் செய்தேன் காண் என்று ஸத்யம்பண்ணிச் சொல்லுகின்றார் காண்மின்.

நவிற்றின்பம்என்று பெரும்பாலும் ஓதப்பட்டாலும் நவிற்றியின்பம்என்ற பிராசீந பாடத்தை ஆதரிப்பதே அழகு; கலிவிருத்தத்தால் அமைந்த இப்பிரபந்தம்- நேரசைமுதலாகத் தொடங்கப்பட்ட பாட்டுகள் ஒற்றொழித்துப் பதினோரெழுத்துக் கொண்ட அடியையுடையனவாகவும், நிரையசை முதலாகத் தொடங்கப்பட்ட பாட்டுக்கள் ஒற்றொழித்துப் பன்னிரண்டெழுத்துக்கள் கொண்ட அடிமையுடையனவாகவும் அமைந்திருக்கும் முறைமைக்கிணங்க நவிற்றி என்றிருக்கவேணுமென்க. நவிற்று என்றால் பத்தெழுத்தாய்விடுமன்றோ நவிற்றுஎன்ற பாடத்தில், நவில் பகுதி; ‘நவிற்றிஎன்ற பாடத்தில், நவிற்று பகுதி: பொருள் ஒன்றே