Tuesday 2 August 2016

ஐந்து செம்பொருட்கள்

எம்பார் ஜீயர் சுவாமிகள் அருளியது 
அறியுடைய ஆத்மாக்கள் யாராயினும்,  அறிய வேண்டிய செம்பொருள்கள் ஐந்தையும் இருபது திருவாய்மொழிகளில்
தெளிவுறுத்தியுள்ளார் நம்மாழ்வார். இவையே வேதம் காட்டும் செம்பொருள் ஐந்து.
  1. அவரவர் தமதமது அறிவறி வகை இறைநிலை பல; அவற்றுள் மிக்க இறைநிலை எது? பெண்மை கலந்த ஆண்மை நிறைந்த திருமால் தத்துவம் .
  2. அறிவுள்ள மனிதன் தன் உண்மை நிலை எது ? உயிர்நிலை பற்றிப் பல கருத்துக்கள் இருப்பினும் அவற்றுள் மெய்யாம் உயிர்நிலை எது ? திருமால் அடியான் என்பதே.
  3. பகுத்தறிவு படைத்த மனிதனுக்கு பல நெறிகள் உண்டு. அவற்றுள் உயிரின் உய்வுக்கு ஏற்கத்தக்க நெறி யாது? உடல் பிணிப்பிலிருந்து விடுபட்டு இறைவன் பிடிப்பில் ஆட்படுதல்.
  4. தக்க நெறியில் செல்லும் பெருமக்களுக்குத் தடையாகியத் தொக்கியலும் ஊழ் வினைகள் எவை? அவை பற்றி அறிதலும் வேண்டும். ஆக்கை வழி உழலாமல் ஆன்மிக அறநெறி நடத்தல்.
  5. அறிவறிந்த மக்கள் பெரும் உயரிய நல்வாழ்வு எது? இறை உணர்வுடன். "தெரிந்து, எழுதி, வாசித்து, கேட்டு , வணங்கி வழிபட்டுப் பூசித்துப்" பொழுது போக்குவதே நல்வாழ்வு.
இவ்வைந்து செம்பொருள் நல்கும் நல்வாழ்வு பற்றிய தெளிந்த ஞானம் அருளுவது, திருவாய்மொழி .
இந்த 'அர்த்த பஞ்சகமே திருமந்திரத்தின் திரண்ட பொருள். திருமந்திர விளக்கமே திருவாய்மொழி'. இதனை 'அறியக் கற்று வல்லார் வைஷ்ணவர் ஆவர்' என்பது நம்மாழ்வார் அளித்த தீர்ப்பு.
என்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

No comments:

Post a Comment