Saturday 30 July 2016

முதல் திருமொழி

1. வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
    வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய
    சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
    இடராழி நீங்குகவே என்று

 [வையம் தகளியா.] தகளியாவது-நெய்க்கும் திரிக்கும் ஆதாரமாயிருக்கிற அகல்.(தாளி என்று உலகவழக்கு. பூமியானது கடிந வஸ்துவாயிருப்பதால் அதைத் தகளியாகவும், கடலானது த்ரவ வஸ்துவாயிருப்பதால் அதை நெய்யாகவும், ஸூர்யன் ப்ரகாசஸ்வரூபனாயிருப்பதால் அவனை விளக்காகவும் ரூபித்து அருளிச்செய்கிறார். இங்கு இங்ஙனே ரூபணம் செய்வதன் கருத்து யாதெனில்; சூந்யமே தத்துவமென்றும், உலகம் ஒரு ஈச்வரனையுடையதல்ல என்றும் பலபடியாகப் பகரும் மதாந்தரங்ளை மறுத்து விசித்திரமான பிரபஞ்சத்தை நிருமிக்கவல்ல ஞானசக்தி முதலிய குணங்களையுடைய திவ்விய மங்கள விக்ரஹத்தோடு கூடிய ஸர்வேச்வரன் உளனென்றும் அவனுக்கு அடிமை செய்கையே புருஷார்த்தமென்றும் இப்பா சுரத்தால் விளக்கப்பட்டதாகும்.
ஸூர்யன் சிறிதும் தவறாமல் உதிப்பதும் அஸ்தமிப்பதுமாக நீடுழியாய் நடந்து வருவதானது-விசித்ரசக்தி வாய்ந்த ஸர்வேச்வரனொருவனுளன் என்பதை நமக்கு நன்றாக விளக்குகின்ற தன்றோ. வார்கடலின் நிலைமையும் வையத்தின் நிலைமையும் இவ்வுண்மையையே வற்புறுத்துகின்றன. கடலானது தன்னிடத்தில் பல பல ஆற்றுப் பெருக்குகள் வந்து விழுதலால் நிறைந்து வழிதலாவது, அவை வந்து விழாத காலத்தில் வடிந்து குறை படுதலாவது ஒன்றுமின்றியே எப்போதும் ஸமநிலைமையாகவே யிருந்துகொண்டு எல்லையை மீறாதிருப்பதும், ஐம்பதுகோடி யோஜனை தூரத்தளவும் பரந்து கடினமாயிராநின்ற இப்பூமியானது பெரியவெள்ளத்தில் ஒரு கழற்காய் மிதப்பதுபோல மஹார்ணவ ஜலத்தில் மிதந்துகொண்டிருப்பதும் இவை தம்மைப் படைத்தவொரு முழு முதற் கடவுளின் அற்புதமான சக்தி விசேஷத்தைப் புலப்படுத்துகின்றனவன்றோ. அப்படிப்பட்ட அபாரசக்தியுக்தனான ஒரு ஜகத்காரணபூதன் ஸித்திக்கும்போது அப்பெருமானுக்குக் கைங்கரியம் செய்யவேண்டுதல் முக்கியம்; கைங்கரியம் மாநஸிக மென்றும் வாசிகமென்றும் காயிகமென்றும் மூன்று வகைப்படும்; அவற்றுள் வாசிக கைங்கரியமான பாசுரம் பாடுதலை அடியேன் செய்கின்றேன்; இக்கைங்கரியத்தை இதுவரையில் நான் செய்யக்கூடாதபடி இடையூறாகவிருந்த ஸம்ஸாரத் துன்பத்திரள்கள் இன்றோடு ஒழிந்திடுக-என்றாயிற்று.
முன்னடிகளின் கருத்தை ஊன்றி நோக்குமிடத்தில் இவ்வாழ்வார் அநுமாநத்தினால் ஈச்வரனை ஸாதிப்பதாக ஏற்படுகின்றது; சராசரரூபமான இந்த பிரபஞ்சம் முழுவைதையும் படைத்து நடத்திக்கொண்டு போவதற்குப் பாங்கான வல்லமை வாய்ந்த ஸர்வேச்வரனொருவனுண்டு என்பதை வையம் கடல் ஸூர்யன் என்ற மூன்று பொருள்களின் நிலைமையைச் சொல்லுகிற முகத்தினால் ஸமர்த்தித்தபடியால் அநுமாநத்தாலே ஈச்வரனை ஸாதிக்கிற தார்க்கிகர்களின் படியை அடியொற்றினாராகிறார்; இதுகூடுமோ? சாரீரகமீமாம்ஸையில் சாஸ்த்ரயோநித்வாதிகரணத்தில் அநுமாநத்தால் ஈச்வரனை ஸாதிக்கலாகாதென்று மறுத்து வேதப்ரமாணமொன்றினாலேயே ஈச்வரனுடைய உண்மையை உணரவெணுமென்று ஸ்தாபித்திருப்பதற்கு மாறாக இஃது இருக்கின்றதே! என்று சிலர் சங்கிக்கக்கூடும்; வேதத்துக்கு விருத்தமாக அநுமாநங்கொண்டு ஸாதிப்பதை அங்கு மறுத்துரைத்த மாத்திரத்தினால் வேதத்துக்கு விருத்தமல்லாத அநுமாநங் கொள்வதில் பிசகுள்ளதாக நினைக்கலாகாது . இது ஸ்ரீபாஷ்யாதி ஸம்மதமுமாம் விரிப்பிற் பெருகும்.

No comments:

Post a Comment